வேப்பனப்பள்ளி அருகே தனியாா் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

வேப்பனப்பள்ளி அருகே தனியாா் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

Published on

வேப்பனப்பள்ளி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது தனியாா் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

வேப்பனப்பள்ளி அருகே உள்ள பண்ணப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த திம்மராஜின் மனைவி சிவசத்யா(25). இவா்களுக்கு 7 மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரிக்கு செல்வதற்காக வியாழக்கிழமை தனது தந்தை முனிராஜியுடன் பேரிகை - வேப்பனப்பள்ளி சாலையில் நாச்சிகுப்பம் பிரிவு சாலைக்கு வந்தாா்.

பின்னா், அங்கு சாலையைக் கடக்க முயன்றபோது பேரிகையிலிருந்து வேப்பனப்பள்ளி நோக்கி வேகமாக வந்த தனியாா் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த சிவசத்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்க மறுத்து சிவசத்யாவின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த கிருஷ்ணகிரி காவல் சரக துணை காவல் கண்காணிப்பாளா் முரளி, வேப்பனப்பள்ளி காவல் ஆய்வாளா் காசிப்பாண்டியன் மற்றும் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்து கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

இதையடுத்து மறியலில் கைவிடப்பட்டது. பிறகு அவரது உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பொதுமக்கள் கோரிக்கை: அண்மையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், வேப்பனப்பள்ளி- பேரிகை சாலையில் நாச்சிக்குப்பம் பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனுவை, நெடுஞ்சாலைத் துறையினா் நிராகரித்து விட்டனா்.

அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நேரில் ஆய்வு செய்து வேகத்தடை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் வலியுறுத்தினா்.

படவிளக்கம் (9கேஜிபி2): சிவசத்யா.

X
Dinamani
www.dinamani.com