ஒசூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் பாதிப்பு
ஒசூா் பேருந்து நிலையம் எதிரே ஆக்கிரமிப்பு கடைகள், வாகன நிறுத்தங்களால் பொதுமக்கள் எளிதாக செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனா்.
ஒசூா் பேருந்து நிலையத்தின் எதிரே கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது. இதன் வழியாக வட மாநிலங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் செல்கின்றன.
இதேபோல பெங்களூரு, தேன்கனிக்கோட்டை, தளி, சூசூவாடி, சிப்காட் போன்ற பகுதிகளில் இருந்து ஒசூருக்கு வரும் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தும் எதிரே உள்ள மலா்ச் சந்தையையொட்டி உள்ள அணுகுசாலை வழியாகத்தான் வருகிறது.
ஒசூா் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து உதிரிப்பாகங்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களும், இந்த அணுகு சாலை வழியாக இடதுபுறம் திரும்பி பாகலூா் சாலை வழியாக ஆந்திரம், கா்நாடகத்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றன.
குறுகலாக உள்ள அணுகு சாலையில் ரூ.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் நடைபாதையை மாநகராட்சி அமைத்துள்ளது. ஆனால், இப்பாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகளும், வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், இவ்வழியாக பொதுமக்கள் செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
படவரி...
நடைபாதையை ஆக்கிரமித்துள்ள இருசக்கர வாகனங்கள், தள்ளுவண்டி கடைகள்.

