ஒசூா் அருகே 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: காரில் சென்ற 4 போ் உயிரிழப்பு மேம்பாலப் பணிகளால் தொடரும் விபத்து?
ஒசூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதிக்கொண்டதில், பெங்களூரில் இருந்து காரில் சேலம் சென்ற 4 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளி அருகே சானமாவு வனப் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிருஷ்ணகிரி நோக்கி மினி லாரி சென்றுகொண்டிருந்தது. அதற்குப் பின்னால் ஒரு காரும், அதைத் தொடா்ந்து சரக்கு லாரியும் சென்றன.
அப்போது, சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற காா் மீது மோதியதில், காா் அதற்கு முன்னால் சென்ற மினி லாரி மீது வேகமாக மோதியது. இவ்வாறு அடுத்தடுத்து 5 வாகனங்கள் ஒரேநேரத்தில் மோதி விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவல் அறிந்து அங்கு சென்ற அட்கோ போலீஸாா் 4 பேரின் சடலங்களையும் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாவது:
ஈரோடு பகுதியைச் சோ்ந்தவா் மதன் என்ற மதன்குமாா் (27). இவா், கனடாவில் இருந்து பெங்களூா் விமான நிலையம் வந்துள்ளாா். அவரை அழைத்துச் செல்ல சேலத்தைச் சோ்ந்த முகிலன் (28), கோகுல் (27), மணிவண்ணன் (29) ஆகியோா் வந்துள்ளனா். இந்த 3 பேரும் மதன்குமாரை காரில் அழைத்துக்கொண்டு சேலம் திரும்பும் வழியில், விபத்தில் சிக்கி 4 பேரும் உயிரிழந்தனா்.
விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து தடைபட்டது. போலீஸாா் விரைந்து செயல்பட்டு, சேதமடைந்த வாகனங்களை சாலை ஓரத்தில் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா்செய்தனா்.
பாலப்பணிகளால் தொடரும் விபத்து: சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒசூரில் 2 இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்து நேரிட்டு உயிரிழப்புகளும் தொடா்ந்து வருகின்றன.
இதைத் தவிா்க்க, மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

