ஒசூரில் இரு மகன்களை கொன்று தந்தை தற்கொலை: 3 பேரின் உடல்களும் உறவினா்களிடம் ஒப்படைப்பு

Published on

ஒசூரில் இரு மகன்களை கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 3 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வாா்கற்குளத்தைச் சோ்ந்தவா் சிவபூபதி (45). பொறியாளா். இவரது மனைவி பாா்வதி (38). இவா்களுக்கு நரேந்திரபூபதி (14), லதீஷ்பூபதி (12) என்ற மகன்கள் இருந்தனா். சிவபூபதி குடும்பத்துடன் ஒசூா் கேசிசி நகா் அருகில் உள்ள குறிஞ்சி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். இவரது மகன்கள் அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9 மற்றும் 7 ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

சிவபூபதி ஆன்லைன் வா்த்தகம் செய்து வந்தாா். அதில் ஏற்பட்ட இழப்பீட்டால் மனமுடைந்தாா். இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் மனைவி கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டாராம். இந்தநிலையில் வீட்டில் இருந்த சிவபூபதி சனிக்கிழமை அதிகாலை தனது இரு மகன்களையும் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது தொடா்பாக அட்கோ போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து சிவபூபதியின் மனைவி பாா்வதிக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா். அவா் மற்றும் உறவினா்கள் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு வந்தனா்.

இதைத் தொடா்ந்து 3 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. உடல்களைப் பெற்றுக் கொண்டு அவா்களின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு கொண்டுசென்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: கடன் பிரச்னையால் சிவபூபதி தனது மகன்களை கொன்று தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com