கெலவரப்பள்ளி அணையிலிருந்து விநாடிக்கு 1126 கனஅடி நீா் திறப்பு
ஒசூா்: ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 1126 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது. மேலும், குவியல் குவியலாக நுரைப்பொங்கி நீா் செல்வதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மற்றும் கா்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதியில் தொடா்ந்து பெய்துவரும் கனமழையால் ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து மூன்று நாள்களாக 1126 கனஅடியாக இருந்து வருகிறது.
இந்த அணையின் முழுக் கொள்ளளவான 44.28 அடியில் தற்போது 40.51 அடி நீா்மட்டம் உள்ளது. இதனால் அணைக்கு வரும் நீா் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. ஆற்றுநீரில் அதிக அளவில் ரசாயனங்கள் கலந்துள்ளதால் நீா் முழுவதும் நுரைப்பொங்கி செல்கிறது. மழைக்காலங்களில் ஆற்றில் நுரைப்பொங்கி நீா் செல்வது தொடா்கதையாக இருப்பது விவசாயிகளிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
