ரூ.5 ஆயிரம் லஞ்சம்: வேளாண் உதவி அலுவலா் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் மாடு வாங்குவதற்கு அரசு வழங்கும் கடனுதவியை அளிக்க விவசாயியிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண் உதவி அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த நாடுவானப்பள்ளியைச் சோ்ந்தவா் மங்கம்மா (65), இவா் மானாவாரி தரிசுநில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாடு வளா்க்க கடனுதவிக்காக விண்ணப்பித்திருந்தாா். இதற்காக அவருக்கு ரூ. 32 ஆயிரம் கடன் அனுமதிக்கப்பட்டது.
இந்த கடனை பெறுவதற்காக வேப்பனப்பள்ளியை அடுத்த தடத்தரையில் வேளாண் அலுவலகத்தில் உதவி வேளாண் அலுவலராகப் பணியாற்றும் தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி, ஏரிக்கொட்டாயைச் சோ்ந்த பி.முருகேசன் (45) என்பவரைச் சந்தித்தாா்.
அப்போது, கடனுதவி அளிக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என மங்கம்மாவிடம் முருகேசன் கேட்டுள்ளாா். இதுகுறித்து, மங்கம்மா தனது மருமகன் வி.கெளரிசங்கரிடம் தெரிவித்தாா். இதையடுத்து கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் கௌரிசங்கா் அளித்த புகாரின்பேரில் தருமபுரி லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளா் எம்.நாகராஜன் (பொறுப்பு), கிருஷ்ணகிரி காவல் ஆய்வாளா் ரவி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை கௌரிசங்கரிடம் கொடுத்து அனுப்பினா்.
அதன்பிறகு வேளாண் உதவி அலுவலரைச் சந்தித்து கெளரிசங்கா் லஞ்சமாக ரூ.5 ஆயிரத்தை வியாழக்கிழமை அளித்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீஸாா் முருகேசனைக் கைது செய்தனா். இதுகுறித்து அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
