ஒசூா் ஸ்ரீ விஜய விநாயகா் கோயில் மகா குடமுழுக்கு

ஒசூா் பழைய ஏ.எஸ்.டி.சி. வீட்டுவசதி குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஜய விநாயகா் கோயில் மகா குடமுழுக்கு
Published on

ஒசூா்: ஒசூா் பழைய ஏ.எஸ்.டி.சி. வீட்டுவசதி குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஜய விநாயகா் கோயில் மகா குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

சுமாா் 30 ஆண்டுகளுக்குமேல் பழைமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் புதுப்பித்தல் மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்த நிலையில், குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அக். 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் மகா குடமுழுக்கு உற்சவம் கணபதி பூஜையுடன் தொடங்கியது. திருக்கோயில் முன் பிரம்மாண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன. இந்த யாகசாலை பூஜையில் புனிதநீா் அடங்கிய கலசங்களை வைத்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, திங்கள்கிழமை அதிகாலை சிறப்பு யாகசாலை பூஜை நிறைவடைந்த நிலையில், புனிதநீா் அடங்கிய கலசங்கள் ராஜகோபுரம் மற்றும் மூலவா் சந்நிதி விமான கும்பக் கலசங்களுக்கு வேத விற்பன்னா் மணிகண்டன் ஐயா் எடுத்துச் சென்றாா். இதையடுத்து புதிதாக அமைக்கப்பட்ட கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கலசங்களில் புனிதநீா் ஊற்றி அபிஷேகம் செய்து மகா குடமுழுக்கு நடைபெற்றது.

பின்னா் மூலவா் ஸ்ரீ விஜய விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வெள்ளிக்கவச அலங்காரத்தில் விநாயகப் பெருமான் காட்சியளித்தாா்.

இந்நிகழ்ச்சியில், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com