ஏரியில் குப்பைகளை கொட்டுவதைத் தடுக்க வேண்டும்
கூட்டப்பள்ளி ஏரியில் திருச்செங்கோடு நகராட்சி குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு நகராட்சியையொட்டி அமைந்துள்ளது கூட்டப்பள்ளி. இந்தக் கிராமத்திலுள்ள ஏரியில் மழைக் காலத்தில் தேங்கும் நீர் சுற்றுப் பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வந்தது.
இந்த நிலையில், திருச்செங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை இந்த ஏரியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கொட்டுவதால் சுற்றுப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மழைக் காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி ஏரியில் நிரம்பியுள்ள குப்பைகளுடன் தேங்கி நிலத்தில் இறங்குவதால் தற்போது கூட்டப்பள்ளியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடிநீர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடரும், இந்தப் பிரச்னையை தடுக்க அந்தப் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இருப்பினும், நகராட்சி நிர்வாகம் ஏரியில் குப்பைகளைக் கொட்டுவதை நிறுத்தவில்லை.
இதையடுத்து, ஏரியில் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் அந்தக் கிராம மக்கள் மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.