நாமக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள செல்போன் கோபுரங்களில் இருந்து பேட்டரிகள், ஜெனரேட்டரைத் திருடியதாக 9 பேரை பரமத்தி போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரிகள், ஜெனரேட்டர், 3 கார்களைப் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பரமத்தி வேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உதயகுமார் தலைமையில், பரமத்தி ஆய்வாளர் கந்தசாமி ஆகியோர் கொண்ட போலீஸார் பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்தக் காரில் ஏராளமான பேட்டரிகள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு, பின் முரனாகப் பதில் தெரிவித்தனராம்.
சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள செல்போன் கோபுரம், நாமக்கல் மாவட்டம் மோகனூர், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், ராசிபுரம், பரமத்தி, புதுச்சத்திரம், ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள செல்போன் கோபுரங்களில் இருந்த பேட்டரிகளைத் திருடியது தெரிய வந்தது. மேலும், மோகனூரில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்திற்கு பயன்படுத்திய ஜெனரேட்டையும் திருடியதும், பேட்டரிகளை திருடுவதற்கு மூன்று கார்களைப் பயன்படுத்தியதும் தெரிய வந்தது.
போலீஸார் உடனடியாக மூன்று கார்கள், ஒரு ஜெனரேட்டர், 185 பேட்டரிகளையும் பறிமுதல் செய்தனர். இவற்றைத் திருடியதாக புதுச்சத்திரம் நவநீபள்ளிப்பட்டி, ஓலப்பாளையத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் சுப்பிரமணி (24), பழனிவேல் மகன் காமராஜ் (30), சுப்பிரமணி மகன் சிவா (25), ராசிபுரம் ஆர்.புதுப்பாளையத்தைச் சேர்ந்த வரதராஜ் மகன் ரவிச்சந்திரன் (35), ராசிபுரம் வடுகம்பாளையத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் அருள்ராஜ் (34) உள்பட மோகனூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட நாமக்கலைச் சேர்ந்த மணி, இளங்கோவன் மகன் கார்த்திக் (34), நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள பெருமாள்கனக்கம்பாளையத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் கார்த்திக் (29) உள்பட 9 பேரை கைது செய்த பரமத்தி, மோகனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.