ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி, பரமத்தி வேலூரில் பொதுப் பணித் துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமத்தி வேலூர் வட்டம்,
ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து பிரியும் ராஜா வாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வெற்றிலை, கரும்பு, கோரை, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த வாய்க்காலில் கடந்த 60 நாள்களுக்கு மேலாக பராமரிப்புப் பணிக்காக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் வெற்றிலை, வாழை உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து போகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காய்ந்து போகும் பயிர்களை காப்பாற்ற ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக் கோரி, இந்தப் பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், தண்ணீர் திறந்து விடாமல் பொதுப் பணித் துறையினர் தண்ணீர் திறந்து விடாமல் மெத்தனம் காட்டி வந்தனர். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க பொதுக் குழுக் கூட்டத்தில் வியாழக்கிழமைக்குள் தண்ணீர் திறக்கப்படாவிட்டால், பரமத்தி வேலூர் சரபங்கா பொதுப் பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, வியாழக்கிழமை காலை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுப் பணித் துறையை அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
பின்னர், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த பரமத்தி வேலூர் வட்டாட்சியர் இளங்கோவை விவசாயிகள் முற்றுகையிட்டு ராஜா வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
அவர், எந்தவித உறுதிமொழியும் அளிக்காததால், பொதுப் பணித் துறை அலுவலகம் அருகே விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்கத் தலைவர் நடராஜன், செயலாளர் வையாபுரி, பொருளாளர் நடேசன் ஆகியோரிடம் வட்டாட்சியர் இளங்கோ, பொதுப் பணித் துறை இளநிலைப் பொறியாளர் தர்மலிங்கம், நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் ராஜாமணி, பரமத்தி வேலூர் டிஎஸ்பி உதயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஜூலை 1-ஆம் தேதி ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினம் தண்ணீர் திறக்கப்படாவிட்டால், தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.