நாமக்கல் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பயிர் விளைச்சல் போட்டியில் முதல் இரு இடங்களைப் பிடித்த விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.40,000 பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.
வேளாண்மைத் துறை சார்பில் மாவட்ட அளவில் ஆண்டுதோறும் விவசாயிகளிடையே பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு, அதிகளவில் பயிர் விளைச்சல் கண்ட விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, 2013-14ஆம் ஆண்டில் சோளம் விளைச்சலில் 4,200 ஹெக்டேர் பயிரிட்ட விவசாயி சின்னசாமிக்கு முதல் பரிசாக ரூ.10,000-மும், 3,960 ஹெக்டேர் பயிரிட்டு இரண்டாமிடம் பிடித்த பெரியசாமிக்கு ரூ.5000-மும், நிலக்கடலை விளைச்சலில் 11,433 ஹெக்டேர் பயிரிட்டு முதலிடம் பிடித்த விவசாயி செங்கோட்டையனுக்கு ரூ.15,000-ம், இரண்டாமிடம் பிடித்த மோகனவேலுக்கு ரூ.10,000-மும் என மொத்தம் ரூ.40,000 பரிசளிக்கப்பட்டது. இதற்கான காசோலையை வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி, சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் வழங்கினார்.
முன்னதாக, விவசாயிகளிடம் குறைகள் கேட்டறியப்பட்டது. அதில், கடந்த இரு ஆண்டுகளாக போதுமான மழைப்பொழிவு இல்லாததால், நாமக்கல் மாவட்டம் முழுவதும் வறட்சி ஏற்பட்டுள்ளது. எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்கள் கூட்டுறவு, தேசியமயமாக்கப்பட்ட, தனியார் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜவ்வரிசி ஆலையில் மரவள்ளி மாவுடன் மக்காச்சோளம் மாவு, ரசாயனம் கலப்பதைத் தடுக்க அமைக்கப்பட்ட கமிட்டியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. இதேபோல, சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் மூலம் விதிமீறும் ஆலைகள் சீல் வைக்கப்பட்டு வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்படுகிறது. இந்த கண்துடைப்பு நடவடிக்கைகளை கைவிட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதைத் தடுக்க வேண்டும்.
வீடுகளில் சூரியஒளி மின்சாரம் அமைப்பை நிறுவ விலைப்பட்டியலை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் வழங்காததால் வங்கிகளில் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த விலைப்பட்டியல்களை உரிய முறையில் வழங்க வேண்டும். ராசிபுரம் உழவர் சந்தையின் முன் ஆக்கிரமித்து காய்கறி வியாபாரிகள் வியாபாரம் செய்வதால் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க உள்ளே வருவதில்லை. இதனால், விவசாயிகளின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. வியாபாரிகளின் இந்தச் செயலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்தனர்.
சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் இந்தக் கோரிக்கைகளை மீது பரிசீலனை செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஆர்.சுப்புலட்சுமி, மாவட்ட சிறப்பு அமலாக்கத் திட்ட அலுவலர் எஸ்.சூரியபிரகாஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) லோகநாதபிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.