வீடுகளில் தனிநபர் கழிப்பறை கட்டாத கொடிக்கால்புதூர் ஊராட்சி வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டது. ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் இந்தச் செயல்பாட்டைக் கண்டித்து, அந்தத் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொடிக்கால்புதூர் ஊராட்சியில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சுமார் 350 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஏப்ரல் மாதம் முதல் தூசூர் ஏரியை தூர்வாரும் பணியில் இந்தத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், வீடுகள் தனிநபர் கழிப்பறை கட்டியுள்ள சுமார் 50 தொழிலாளர்கள் மட்டும் ஏரி தூர்வாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதுடன், கழிப்பறை கட்டாத சுமார் 300 தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டு வியாழக்கிழமை காலை வெளியேற்றப்பட்டனர். இதில், பெரும்பகுதியினர் பெண் தொழிலாளர்களாவர்.
இதனால், ஆத்திரமடைந்த வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்கள் நாமக்கல்- துறையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த நாமக்கல், எருமப்பட்டி போலீஸார், மறியலில் ஈடுபட்டிருந்த வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, தனிநபர் கழிப்பறை கட்ட அரசு சார்பில் ரூ.10,500 வழங்கப்படுகிறது.
இந்தத் தொகையைக் கொண்டு கழிப்பறையை கட்ட இயலாது. தவிர, கழிப்பறை கட்ட ஆகும் கூடுதலாக செலவினங்களை செய்ய முடியாத நிலையில் பல தொழிலாளர்கள் உள்ளோம். எனினும், கழிப்பறையைக் கட்டினால் மட்டுமே வேலை எனக் கூறி வேலை மறுக்கப்படுவதால் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, கழிப்பறையைக் கட்ட வேண்டும் என காரணம் காட்டி வேலை மறுப்பு செய்யக் கூடாது என்றனர் அவர்கள்.
இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவின் பேரில் அனைத்துத் தொழிலாளர்களும் ஏரியைத் தூர்வாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும், அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகளைக் கட்ட வேண்டியது அரசின் உத்தரவு என்பதால், இந்த பிரச்னை குறித்து உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன் தெரிவித்தார்.