சுடச்சுட

  

  நாமக்கல்லில் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டுச் சாவு

  By நாமக்கல்,  |   Published on : 11th March 2014 12:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல்லிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவர் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
   நாமக்கல் மாவட்டம் , திருச்செங்கோடு வட்டம், எலச்சிப்பாளையம் அருகேயுள்ள கொசவம்பாளையத்தைச் சேர்ந்த அஞ்சல் ஊழியர் ராமமூர்த்தி. இவரது மனைவி ஜெயம்மாள். இவர் ராமாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியை.
   இவர்களது இரண்டாவது மகன் மயில்விழிச்செல்வன் (17). நாமக்கல் காவெட்டிப்பட்டியிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் பிளஸ் 2 கணிதப் பிரிவில் படித்து வந்தார். பள்ளிக்கு அருகே உள்ள வாடகை வீட்டில் மயில்விழிச்செல்வன் பெற்றோருடன் தங்கி இருந்தார். இந்த நிலையில், மயில்விழிச்செல்வன் திங்கள்கிழமை பிளஸ் 2 இயற்பியல் பொதுத் தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றார். அவரது பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டனர். தேர்வு முடிந்து பிற்பகல் 1.15 மணிக்கு வீட்டுக்கு வந்த மயில்விழிச்செல்வன், உள்புறமாக தாழிட்டுக் கொண்டு தனது தாயின் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் ஜன்னல் திறக்கப்பட்ட நிலையில் இருந்ததால், வெளியே சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி ஊழியர்கள், மாணவர் தூக்கிட்டதை அறிந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஆனால், அதற்குள் மயில்விழிச்செல்வனின் உயிர் பிரிந்துவிட்டது.
   தகவலறிந்த நாமக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஆய்வாளர்கள் பாஸ்கரன், முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, உடலைக் கைப்பற்றி வீட்டில் சோதனையிட்டனர். அப்போது மாணவர் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், நன்றாகப் படிக்க முடியாத காரணத்தால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு வேறு யாரும் காரணமில்லை என்றும் அதில் எழுதப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த ராமமூர்த்தி, ஜெயம்மாள் தம்பதியினர் மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
   பின்னர், உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
   மூன்றாவது சம்பவம்
   நாமக்கல் காவெட்டிப்பட்டி தனியார் பள்ளி மாணவர்களைப் பொருத்தவரையில், மயில்விழிச்செல்வனின் தற்கொலை நிகழ் கல்வியாண்டில் நிகழ்ந்த மூன்றாவது சம்பவமாகும்.
   இதற்கு முன்பு சேலம் மகுடஞ்சாவடியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் மோகன்ராஜ், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி இரவு அந்தப் பள்ளி விடுதி அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதேபோல, மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் வெங்கடேசன், ஜனவரி 4ஆம் தேதி காலை பள்ளி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
   மாணவர் மோகன்ராஜ் இறந்த சம்பவத்தில் அந்தப் பள்ளித் தாளாளர், விடுதிக் காப்பாளர், சக மாணவர் ஒருவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திலும் பள்ளித் தாளாளர், விடுதிக் காப்பாளர், இரு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai