Enable Javscript for better performance
கோடை வெயில் அதிகரிப்பு:  கோழிகளின் இறப்பைத் தடுக்க பண்ணைகளில் செயற்கைக் குளிர்விப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோடை வெயில் அதிகரிப்பு:  கோழிகளின் இறப்பைத் தடுக்க பண்ணைகளில் செயற்கைக் குளிர்விப்பு

    By  நாமக்கல்,  |   Published on : 27th March 2014 10:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், பண்ணைகளில் கோழிகளின் இறப்பைத் தடுக்க செயற்கைக் குளிர்விப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, முட்டை உற்பத்தி குறைவதைத் தடுக்கத் தீவனங்களில் எரிசக்தியின் அளவு குறைத்து அளிக்கப்படுகிறது.
     நாமக்கல் மண்டலத்திலுள்ள சுமார் ஆயிரம் பண்ணைகளில் சுமார் 4 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு 3.25 முதல் 3.40 கோடி முட்டைகள் பெறப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. தற்போது கோடை வெயின் தாக்கம் அதிகரித்து கடந்த சில நாள்களாகப் பகல் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட் முதல் 103 டிகிரி பாரன்ஹீட் வரை வீசுகிறது.
     அதிகரித்து வரும் இந்த வெப்பத்தால் பண்ணைக் கோழிகளிடையே சோர்வும், இறப்பும் அதிகரிக்கும் என்று நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியிலுள்ள வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
     இதையடுத்து, பண்ணைகளில் கோழிகளின் இறப்பைத் தடுக்கச் செயற்கைக் குளிர்விப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், பண்ணைகளில் கோழிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் வெப்பம் அதிகளமாக உள்ள நண்பகல் நேரத்தில் குழாய்கள் மூலம் குளிர்ந்த நீர் தெளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கோழிகளின் உடல் வெப்பம் சீராக வைக்கப்படுவதால் கோழிகளின் இறப்பைக் குறைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
     இதற்கிடையே, கோடை வெயிலால் முட்டை உற்பத்தி கடந்த சில நாள்களில் 3 முதல் 4 சதம் வரை குறைந்துள்ளதாகவும், இது மேலும் குறையும் என்றும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். இதன்படி, பண்ணைகளில் முட்டை உற்பத்திக் குறைவதைத் தடுக்க நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் அறிவுறுத்தலின் அடிப்படையில், கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனங்களின் எரிசக்தியின் அளவு குறைத்து அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.நல்லதம்பி கூறியது: கோடை காலம் என்றால் பண்ணைகளில் கோழிகளின் இறப்பு அதிகரிப்பதும், முட்டை உற்பத்திக் குறைவதும் வழக்கமாகும்.
     இந்த இறப்பை அதிகரிக்காமல் தடுக்கச் செயற்கைக் குளிர்விப்பு முறையைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
     இதேபோல, முட்டை உற்பத்திக் குறைவதைத் தடுக்கத் தீவனத்தில் எரிசக்தியின் அளவைக் குறைக்கவும், கோழிகளுக்கு குளுக்கோஸ் போடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai