Enable Javscript for better performance
சூடுபிடித்தது நாமக்கல் தேர்தல் களம்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக ஆகிய முக்கியக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளதால், நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
     நாமக்கல், பரமத்திவேலூர், ராசிபுரம், சேந்தமங்கலம், சங்ககிரி, திருச்செங்கோடு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 13,05,475 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தத் தொகுதியில் திமுக சார்பில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர் செ. காந்திச்செல்வன் எம்.பி. இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார்.
     இவரை எதிர்த்து அதிமுக மாவட்ட அவைத் தலைவர் பி.ஆர்.சுந்தரம், தேமுதிக சார்பில் மாநில வழக்குரைஞர் பிரிவு துணைச் செயலர் எஸ்.கே.வேல், காங்கிரஸ் சார்பில் அந்தக் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
     இவர்கள் தவிர, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இவற்றில் முன்னிலையில் உள்ள அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ் ஆகிய 4 அரசியல் கட்சி வேட்பாளர்களும் மக்களைச் சந்தித்து வாக்குகள் சேரிக்கும் பணியில் முனைப்புக் காட்டத்
     தொடங்கியுள்ளனர்.
     திட்டங்களை முன்னிறுத்தும் திமுக: கடந்த திமுக அரசில் 5 ஆண்டுகளில் நாமக்கல் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள், பணிகளை முன்னிலைப்படுத்தி அந்தக் கட்சி பிரசாரம் செய்து வருகிறது. குறிப்பாக, 15 ஆண்டுகளாக மந்தகதியில் நடைபெற்று வந்த சேலம் - கரூர் அகல ரயில் பாதைத் திட்டம் நிறைவேற்றப்பட்டதை திமுகவினர் தங்களது பிரசாரத்தில் முக்கியமாகக் கூறி வருகின்றனர்.
     தவிர, தொகுதியில் குடிநீர், சாலை, மேம்பாலம், மருத்துவமனைக் கட்டடம், கொல்லிமலையில் மூலிகைச் செடிகள் வளர்ப்பு, பேருந்து நிலையங்கள் என ரூ. 271.80 கோடியில் செய்யப்பட்டுள்ள பணிகளையும் பட்டியலிட்டு பிரசாரம் செய்து வருகிறது. இதற்கிடையே, திமுக ஆட்சியில் தமிழக மக்கள் நலனுக்காகக் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், அதேசமயம், அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டுள்ள திட்டங்களை விளக்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
     காங்கிரஸ், திமுக ஊழல்களைப் பட்டியலிடும் அதிமுக: அதிமுக தரப்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும் என்ற குறிக்கோளை முன்னிலைப்படுத்தியே தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக, மூன்று ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் விளக்கிக் கூறுகின்றனர். அதோடு, காங்கிரஸ், திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களும், அந்தக் கட்சிகள் மீது நடைபெறும் வழக்குகள் குறித்தும் எடுத்துரைக்கின்றனர். முக்கியமாக, அண்டை நாடுகளுடனான பிரச்னைகளில் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை பட்டியலிடுகின்றனர். தவிர, நாமக்கல் தொகுதி எம்.பி. காந்திசெல்வன் மத்திய சுகாதார இணை அமைச்சராக இருந்து செய்யத் தவறிய பணிகளையும் சுட்டிக் காட்டி பிரசாரம் செயய்ப்படுகிறது.
     மோடியை முன்னிறுத்தும் பாஜக: அதேசமயம், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக, மோடி அலையை வசப்படுத்திட மோடி பிரதமராக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்துடன் தீவிர பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளது. மேலும், திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆட்சியின் குறைபாடுகளைப் பட்டியலிட்டு அந்தக் கட்சி வாக்குகள் சேகரித்து வருகிறது.
     காங்கிரஸின் திட்டம்: காங்கிரஸ் தரப்பில் இன்னும் மக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரிக்கத் தொடங்கவில்லை என்றாலும், மத்தியில் கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கிய மசோதாக்களான தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், நிதிக் கொள்கைகள் போன்றவற்றை மையப்படுத்தியும், அதேசமயம், நாடாளுமன்றத்தில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட அமளியால் நிறைவேற்ற முடியாமல் போன மசோதாக்கள் குறித்தும் விளக்கி பிரசாரம் செய்ய உள்ளதாகவும் அந்தக் கட்சியினர் தெரிவித்தனர். மேலும், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் பின்னணியில் உள்ள மத்திய அரசின் நிதி உதவிகள் குறித்தும், அவை மறைக்கப்படும் தகவல்கள் குறித்தும் மக்களிடையே எடுத்துரைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்து.
     அந்த வகையில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளதால், நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் களம் கோடை வெயிலுக்கு இணையாகச் சூடுபிடித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai