Enable Javscript for better performance
\\\"பொருந்தாத கட்சிகளைக் கொண்டது பாஜக கூட்டணி\\\'- Dinamani

சுடச்சுட

    

    ஒன்றுக்கொன்று பொருந்தாதக் கட்சிகளைக் கொண்டது பாஜக கூட்டணி. இந்தக் கூட்டணியால் தமிழகம், புதுச்சேரியிலுள்ள ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது என்று, அதிமுக தலைமைப் பேச்சாளர் ஜெகவீரபாண்டியன் கூறினார்.
     நாமக்கல் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:
     பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக, மதிமுக கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பொருந்தாத இந்தக் கட்சிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு திசைக்கு இழுத்துக் கொண்டுள்ளன. இதில், "வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை' என்று பாமக கூறி வருவதால், சேலத்தில் தேமுதிக வேட்பாளர் சுதீஸ் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைவது உறுதி.
     தவிர, மற்ற சமூக வாக்குகள் பாமகவுக்கு கிடைக்காது என்பதால், தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற முடியாது. இதன்படி, பொருத்தமற்ற இந்தக் கூட்டணிக் கட்சிகள் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாது.
     நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு உத்தர பிரதேசம், பஞ்சாப், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் பிரதமராக இருந்துள்ளனர். இதுவரை தமிழகத்திலிருந்து ஒருவர் கூட பிரதமராக இருந்ததில்லை. அதற்கான தகுதியும், திறமையும் படைத்தவர் தமிழகத்தில் இதுவரை இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது அதற்குரிய தகுதி படைத்தவராக தமிழக முதல்வர் ஜெயலலிதா இருப்பதை மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒப்புக்கொண்டுள்ளார்.
     இந்தியா பன்மொழி பேசும் மாநிலங்களைக் கொண்ட நாடாகும். இந்த நாட்டை ஆளுவதற்கு பன்மொழி தெரிந்த தலைவர்தான் தேவை. அந்தவகையில், நாட்டிலேயே பன்மொழி பேசும் தலைவராக ஜெயலலிதா மட்டுமே உள்ளார். தவிர, அறிவு, ஆற்றல், நேர்மை, முடிவு எடுக்கும் திறமையுடன் திகழும் ஜெயலலிதாவால்தான் அண்டை நாடுகளுடனானப் பிரச்னைகளையும் தடுக்க முடியும். இதனடிப்படையில், தமிழகம், புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று, வருகிற ஜூன் மாதம் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக பதவியேற்பது உறுதி என்றார் அவர்.
     சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், முன்னாள் எம்.பி. அன்பழகன், வழக்குரைஞர் பிரிவு மாவட்டச் செயலர் பால்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai