Enable Javscript for better performance
மல்லசமுத்திரம் கோயில் விவகாரம்;  உயர் அதிகாரிகளுக்கு குறுந்தகவல்:  நாமக்கல் ஆட்சியர் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மல்லசமுத்திரம் கோயில் விவகாரம்;  உயர் அதிகாரிகளுக்கு குறுந்தகவல்:  நாமக்கல் ஆட்சியர் எச்சரிக்கை

    By  நாமக்கல்  |   Published on : 27th March 2014 10:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மல்லசமுத்திரம் கோயில் விவகாரம் தொடர்பாக உயரதிகாரிகளுக்கு நூற்றுக்கணக்கான குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டதால் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
     நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் இத்தகைய அவதூறு செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி எச்சரிக்கை விடுத்தார்.
     திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரத்திலுள்ள சோழீஸ்வரசுவாமி அழகுராயப் பெருமாள் கோயில், செல்லாண்டியம்மன் கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானவை. எனினும், இந்தக் கோயில்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கோயில் சொத்துக்களை அந்தச் சமூகத்தின் அறக்கட்டளை பெயருக்கு மாற்றம் செய்திருப்பதாகவும் கூறி, மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த பிற சமூக மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
     தொடர்ந்து, சில நாள்களுக்கு முன்பு அந்தப் பகுதியைச் சேர்ந்த சில குடும்பத்தினர் வீடுகளின் முன் கருப்புக் கொடி கட்டி போராட்டம் செய்ததுடன், தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.
     இதன்தொடர்ச்சியாக, மல்லசமுத்திரம் கோயில் விவகாரம் தொடர்பாக அரசுத் துறை உயரதிகாரிகளுக்கு நூற்றுக்கணக்கான குறுந்தகவல்கள் புதன்கிழமை அனுப்பப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த மாவட்ட நிர்வாகம், குறுந்தகவல்கள் அனுப்பியவர்கள் குறித்து விசாரணை நடத்திட காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, மல்லசமுத்திரம் கோயில்கள் தொடர்பாக மக்களை தூண்டிவிட்டு அவதூறு செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
     இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: மல்லசமுத்திரம் சோழீஸ்வரசுவாமி அழகுராயப் பெருமாள் திருக்கோயில், செல்லாண்டியம்மன் திருக் கோயில்களுக்கு இந்து சமய அறநிலைய சட்டப் பிரிவு 64(1)-ன் கீழ் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நிர்வாகம் செய்திட கோவை துணை ஆணையரால் 1983, மார்ச் 2-இல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கோயில் நிர்வாகம் தொடர்பாகவும், கோயில்களில் தேர்த் திருவிழா நடத்துவது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
     இதற்கிடையே, மல்லசமுத்திரம் மக்களை சிலர் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வைக்கவும், தேர்தலைப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவும் தூண்டி வருவது தெரிய வந்துள்ளது. தவிர, நூற்றுக்கணக்கான குறுந்தகவல்களை பல்வேறு உயரதிகாரிகளுக்கு அனுப்பி அவர்களின் அன்றாடப் பணிகளில் தொல்லைகள் ஏற்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக காவல் துறை மூலம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai