Enable Javscript for better performance
மளிகை வியாபாரியிடம் பணம் பறித்ததாகப் புகார்- Dinamani

சுடச்சுட

    

    மளிகை வியாபாரியிடம் பணம் பறித்ததாகப் புகார்

    By  ராசிபுரம்,  |   Published on : 27th March 2014 10:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மளிகை வியாபாரியிடம் தேர்தல் பறக்கும் படை அலுவலர் என மிரட்டி பணம் பறித்ததாக காவல் நிலையத்தில் புகார் கூறப்பட்டுள்ளது.
     ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்தவர் ஷேக் மொகைதீன். இவரது மகன்கள் முகம்மது சிக்கந்தர் (42), சர்புதின் (29). இவர்கள் நாமகிரிப்பேட்டை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லக்கி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் மளிகைக் கடை நடத்தி வருகின்றனர். மார்ச் 24-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் முகம்மது சிக்கந்தர், சர்புதின் ஆகியோர் டாடா ஆட்டோவில் சேலம் செவ்வாய்பேட்டைக்கு மளிகைப் பொருள்கள் வாங்கச் சென்று கொண்டிருந்தனர்.
     ராசிபுரம் சேலம் சாலை ரயில்வே மேம்பாலத்தில் சென்ற போது, ஒருவர் ஆட்டோவை நிறுத்தி விசாரணை செய்தாராம். தேர்தல் பறக்கும் படை போலீஸ் அதிகாரி என்றும், ஆட்டோவை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறி, விசாரணை நடத்தினராம்.
     இதில், மளிகைப் பொருள் வாங்க முகம்மது சிக்கந்தர் கொண்டு சென்ற ரூ.32 ஆயிரம் ரொக்கம், மளிகை சாமான் பட்டியல், பாக்கெட் டைரி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, இதுகுறித்து சற்று தொலைவில் உள்ள தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து விளக்கம் கூறி பெற்றுச் செல்லும்படி கூறிவிட்டு, அந்த நபர் பணத்துடன் சென்று விட்டாராம்.
     அவரைத் தொடர்ந்து வந்த போது, அங்கு யாரும் இல்லாமல் அதிர்ச்சியடைந்த அவர்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புதன்கிழமை ராசிபுரம் காவல் நிலையத்துக்கு வந்து இருவரும் புகார் அளித்தனர். இதன் பேரில், ராசிபுரம் காவல் ஆய்வாளர் ராஜாரணவீரன் இருவரிடமும் புகாரைப் பெற்று விசாரணை நடத்தி வருகிறார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai