Enable Javscript for better performance
வாங்கல் பாலம் பணியை விரைந்து  முடிக்காவிடில் நோட்டாவுக்கு வாக்களிப்பு:  மோகனூர் பொதுமக்கள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வாங்கல் பாலம் பணியை விரைந்து  முடிக்காவிடில் நோட்டாவுக்கு வாக்களிப்பு:  மோகனூர் பொதுமக்கள் அறிவிப்பு

    By  நாமக்கல்,  |   Published on : 27th March 2014 10:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மோகனூர் - வாங்கல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க உறுதி அளிக்காவிடில், ஏப்ரல் 8-ஆம் தேதி கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்றும், மக்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிப்போம் என்றும் மோகனூர் வட்டாரப் பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
     நாமக்கல் மாவட்டம், மோகனூருக்கும், கரூர் மாவட்டம், வாங்கல் பகுதிக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் 35 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
     இதனடிப்படையில், கடந்த திமுக ஆட்சியின் போது ரூ.36.30 கோடிக்கு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, 2009, மார்ச் மாதம் மோகனூர் - வாங்கல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
     ஆனால், 5 ஆண்டுகளாகியும் பாலம் கட்டுமானப் பணிகள் முடிவடையாமல் இன்னும் 15 சதப் பணிகள் நிலுவையில் உள்ளன.
     இதற்கிடையே, திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதாலேயே அதிமுக அரசுக் கிடப்பில் போட்டுள்ளதாகக் கூறி போராட்டம் நடத்தப்பட்டது.
     ஆனால், அதிகாரிகள் தரப்பில், ஒதுக்கப்பட்ட நிதி போதவில்லை எனக் கூறி, ஒப்பந்ததாரர் பாதிப் பணி நடைபெறும் போது விலகியதால் பணியை முடிக்கத் தாமதமாகியிருப்பதாகவும், தற்போது கூடுதலாக ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதால் வேறு ஒப்பந்ததாரரைக் கொண்டு பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு வந்தது.
     இந்த நிலையில், மோகனூர் - வாங்கல் பாலம் விவகாரம் தொடர்பாக மோகனூர் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் அந்தப் பாலத்தின் அருகே புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர வர்த்தகர்கள் சங்க நிர்வாகி அருணாசலம் தலைமை வகித்தார். மோகனூர் ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் ஜனதா வேலுச்சாமி முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் நவலடி, வாழை விவசாயிகள் சங்கத் தலைவர் சுந்ததராஜன், மணல் லாரிகள் சங்கத் தலைவர் பொன்னுச்சாமி உள்பட சுமார் 60 பேர் பங்கேற்றனர்.
     கூட்டத்தில், 5 ஆண்டுகளாக மந்தகதியில் நடைபெற்று வரும் மோகனூர் - வாங்கல் காவிரிப் பாலத்தை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்று கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்படும். இதற்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் உரிய பதில் அளிக்காவிடில் ஏப்ரல் 8-ஆம் தேதி மோகனூரில் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் முடிவெடுத்துள்ளனர்.
     தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் மோகனூரிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் நோட்டாவுக்கு வாக்களிப்பதென முடிவு செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் ஒன்றியத் தலைவர் நவலடி தெரிவித்தார்.
     தேர்தல் சமயத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்ட முடிவால் மோகனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai