சுடச்சுட

  

  குமாரபாளையத்தில் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழைநீர்

  By குமாரபாளையம்  |   Published on : 03rd November 2014 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமாரபாளையம் நகராட்சி குடியிருப்புப் பகுதியில் வெளியேற வழியின்றி மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.

  மேலும், தேங்கிய தண்ணீரில் அதிகளவில் மீன்கள் வளர்ந்து வருவது அந்தப் பகுதியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  குமாரபாளையம் நகராட்சி 18-ஆவது வார்டில் உள்ளது ஆலாங்காடு. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள அந்தப் பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மிகவும் தாழ்வான பகுதியாக இருப்பதால், பிற பகுதியில் பெய்யும் மழைநீர், கழிவு நீர் எளிதில் இந்தக் குடியிருப்புப் பகுதியைச் சூழ்கிறது.

  மேலும், மழைநீர் வெளியேற போதிய வடிகால்கள் இல்லாததால், மழை நின்று மூன்று நாள்களாகியும் வீடுகளுக்கு முன்பும், வீதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. குமாரபாளையம் நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தும் போதிய நடவடிக்கை எடுக்கப்படாததால், இந்தப் குதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

  இந்தநிலையில், தேங்கியுள்ள மழைநீரில் அதிகளவில் மீன்கள் வளர்ந்து வருகின்றன. பல இடங்களில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் நிற்கிறது.

  வீதிகளில் தேங்கிய மழைநீரைக் கடக்காமல் வீட்டுக்குள் செல்ல முடியாத நிலையே தற்போது காணப்படுகிறது.

  மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதியினர் வலியுறுத்தினர்.

  இதுகுறித்து நகர்மன்றத் துணைத் தலைவரும், வார்டு உறுப்பினருமான கேஎஸ்எம்.பாலசுப்பிரமணி கூறியது: இந்தப் பகுதியில் தேங்கும் மழைநீர் வெளியேற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் தங்கமணி, அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றனர் என்றார்.

  இந்த இடத்தை வீட்டுமனைகளாக விற்பனை செய்தவருடன் நகராட்சி நிர்வாகம் சார்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்குச் சொந்தமாக உள்ள நிலத்தில் மழைநீர் வெளியேற வடிகால் அமைத்துத் தர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என நகராட்சி ஆணையர் என்.சங்கரன் தெரிவித்தார்.

  தாழ்வான பகுதி, வடிகால் வசதியின்மை, அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகள் என பல்வேறு காரணங்களால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ள தங்களின் பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai