Enable Javscript for better performance
விலைவாசி உயர்வால் குடும்பங்களின் சுமை அதிகரிப்பு ஆர்ப்பாட்டத்தில் காந்திசெல்வன் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    விலைவாசி உயர்வால் குடும்பங்களின் சுமை அதிகரிப்பு ஆர்ப்பாட்டத்தில் காந்திசெல்வன் குற்றச்சாட்டு

    By நாமக்கல்  |   Published on : 04th November 2014 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் நிலவும் கடுமையான விலைவாசி உயர்வால் குடும்பங்களின் சுமை அதிகரித்துள்ளதாக நாமக்கல்லில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட திமுக செயலர் செ.காந்திசெல்வன் குற்றஞ்சாட்டினார்.

    சட்டப்பேரவை தேர்தலின்போது மாற்றம் வேண்டி வாக்களித்த தமிழக மக்களுக்கு அதிமுக அரசு ஏமாற்றத்தை மட்டுமே அளித்துக் கொண்டுள்ளது. திமுக ஆட்சியில் லிட்டர் ரூ.17.75க்கு விற்கப்பட்ட பால் விலை அதிமுக ஆட்சியில் இரு முறை உயர்த்தப்பட்டு தற்போது லிட்டர் ரூ.48க்கு விற்கப்படுகிறது. ஏரத்தாள 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டதால் மக்கள் பெருமள வில் துயரமடைந்துள்ளனர்.

    மேலும், மின்கட்டணம் உயர்த்தப்பட்டதன் விளைவாக தற்போது ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 வரை மின் செலவு கூடியுள்ளது. இதேபோல், பேருந்து கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் மறைமுகமாக பெருமளவில் சுமை அதிகரித்துள்ளது. அதேசமயம், நியாய விலைக் கடைகளில் 60 சத பொருட்கள் இருப்பு இருப்பதில்லை. இத்தகைய அதிமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

    திமுக கொண்டு வந்தது என்பதற்காகவே அதிமுக அரசு பல திட்டங்களை முடக்கி வைத்துள்ளது. அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர்- வாங்கல் பாலம், கொல்லிமலை மாற்றுவழி பாதை, ராசிபுரம் சுற்றுச்சாலைத் திட்டம் போன்றவை பாதியிலேயே முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்தநிலையில், நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் பதவியை இழந்து சிறைக்கு சென்றதன் மூலம் தமிழகத்துக்கு ஜெயலலிதா பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார்.

    அவர் சிறை சென்ற சமயத்தில் அமைச்சர்கள் பணத்தை வாரி இறைத்து போராட்டங்கள், வேண்டுதல்களில் ஈடுபட்டதன் மூலம் தமிழகத்தில் ஒரு மாயையை ஏற்படுத்தி விளைந்தனர். ஆனால், நீதிதான் கண்டிப்பாக வெற்றி பெறும். அந்த வகையில், ஜெயலலிதா இன்னும் 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது என்பதுடன் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்பதையும் யாரும் தடுக்க முடியாது என்றார் அவர்.

    தலைமை தேர்தல் பணிக்குழு செயலர் பார்.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜே.கே.கே.மாணிக்கம், துரைசாமி, கண்ணன், ஆர்.சக்திவேல், மலர்விழி சம்பத், செல்வி, வேல்முருகன், நகர செயலர்கள் செல்வராஜ், ராமதாஸ், நடேசன், சேகர், குமார் உள்பட 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai