Enable Javscript for better performance
ஜவ்வரிசி ஏலம் நடத்தக் கோரி எம்.பி.யிடம் விவசாயிகள் முறையீடு- Dinamani

சுடச்சுட

    

    ஜவ்வரிசி ஏலம் நடத்தக் கோரி எம்.பி.யிடம் விவசாயிகள் முறையீடு

    By  நாமக்கல்  |   Published on : 05th November 2014 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜவ்வரிசி ஏலத்தை வியாபாரிகள் புறக்கணிப்பதால், மரவள்ளிக் கிழங்கு கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, விவசாயிகள் நாமக்கல் மக்களவை உறுப்பினர் பி.ஆர். சுந்தரத்தை சந்தித்து செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
     சேலம் பகுதியில் ஜவ்வரியில் கலப்படம் செய்வதைத் தடுக்கும் வகையில், உணவுப் பாதுகாப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வியாபாரிகள் சேலம் சேகோ சர்வ்வில் நடைபெறும் ஜவ்வரிசி ஏலத்தைப் புறக்கணித்து வருகின்றனர். இதனால், ஜவ்வரிசி விலை சரிந்து வருவதுடன், ஜவ்வரிசி தயாரிக்கப் பயன்படும் மரவள்ளி கிழங்கின் விலையும் பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளது.
     இதனால், மரவள்ளி விவசாயிகள் பாதிக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சுந்தரம் தலைமையில் நாமக்கல் மாவட்ட மரவள்ளி விவசாயிகள், நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரத்தை செவ்வாய்க்கிழமை காலை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
     அப்போது விவசாயிகள் கூறியது:
     தமிழகத்தில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஒரு மூட்டை (75 கிலோ) மரவள்ளி கிழங்கின் விலை ரூ.1,000ஆக இருந்தது. தற்போது, ஆலைகளில் மரவள்ளி கிழங்கின் தோலை நீக்கி எந்தவித ரசாயன கலப்பும் செய்யாமல் இயற்கையான முறையில் ஜவ்வரிசி தயாரிப்பதால் அந்த ஜவ்வரிசிகளுக்கு வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 90 கிலோ ஜவ்வரிசி மூட்டையின் விலை ரூ.6,000-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மரவள்ளி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது.
     இந்த நிலையில், கடந்த சில நாள்களாக சேகோ சர்வ் நிர்வாகத்துடன் ஏற்பட்டுள்ள பிரச்னையால், வியாபாரிகள் யாரும் ஜவ்வரிசி ஏலத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதால் ஏலம் நடைபெறவில்லை. இதனால், ஜவ்வரிசி விலை குறைந்துடன், மரவள்ளி கிழங்கு விலையும் வீழ்ச்சியடைந்தது. மேலும், ஜவ்வரிசி ஏலம் நடைபெறாமல் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால் மரவள்ளி கிழங்கின் அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு பயிரிலேயே வீணாகும் நிலை ஏற்படக்கூடும். எனவே, விவசாயிகளின் நலன் கருதி சேகோ சர்வில் ஜவ்வரிசி ஏலத்தை விரைவில் நடைபெற அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
     கோரிக்கையை ஏற்ற எம்பி பி.ஆர்.சுந்தரம், மரவள்ளி விலை வீழ்ச்சியடைந்து விவசாயிகளுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஜவ்வரிசி வியாபாரிகளுடனான பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணவும், சேகோ சர்வில் ஏலத்தை தாமதமின்றி நடத்தி விலைவீழ்ச்சியை தடுக்கவும் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai