சுடச்சுட

  

  2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திருச்செங்கோடு தொகுதி தேமுதிக வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய திமுக உறுப்பினருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

  நாமக்கல் மாவட்ட தேமுதிக செயலர் பி.சம்பத்குமார், தற்போது திருச்செங்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். இவர் 2011 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக சார்பில், திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

  தொடர்ந்து, அவர் கட்சித் தலைவர் விஜயகாந்தை சந்திக்க 2011, மார்ச் 22-ஆம் தேதி சென்னைக்குச் சென்றார். அன்றிரவு 9.15 மணியளவில் நாமக்கல் மோகனூர் சாலையிலுள்ள அவரது வீட்டுக்கு ஆம்னி வேனில் வந்த 4 பேர் இரு பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

  இதில், வீட்டின் முன்புற கதவு, ஜன்னல், தளவாடப் பொருள்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

  சம்பத்குமாரின் குடும்பத்தினர் அருகே வசிப்பவர்களின் உதவியுடன் தீயை அணைத்தனர். இதுகுறித்து நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், மாவட்ட தேமுதிக துணைச் செயலராக இருந்த பொங்கியண்ணன் வேட்பாளராக அறிவிக்கப்படாததால், அவரது ஆதரவாளர்களான திருச்செங்கோடு தொட்டிகாரபாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் ரமேஷ் (34), முத்துச்சாமி மகன் சிவக்குமார் (24), முத்தையன் மகன் உதயசங்கர் (26), மாரியப்பன் மகன் குமார் (23) ஆகியோர் சம்பத்குமாரின் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசியது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

  இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, குற்றம்சாட்டப்பட்ட ரமேஷுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

  மேலும், இந்த வழக்கில் சிவக்குமார், உதயசங்கர், குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

  ரமேஷ் தற்போது திமுக அடிப்படை உறுப்பினராகவும், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai