Enable Javscript for better performance
மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்துக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்துக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு

    By நாமக்கல்,  |   Published on : 06th November 2014 05:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலை நாடுகளின் அடிப்படையில் இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நாமக்கல் வட்ட லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய சாலைகளின் அடிப்படையிலேயே சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

    நாமக்கல் வட்ட லாரி உரிமையாளர்கள் சங்க மகாசபைக் கூட்டம் நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் கே.நல்லதம்பி தலைமை வகித்தார். சங்கச் செயலர் என்.சுப்பிரமணியம் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பி.சீரங்கன் வரவு, செலவு அறிக்கையைத் தாக்கல் செய்தார். தென்மண்டல எல்.பி.ஜி. காஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் நடராஜன், செயலர் கார்த்திக் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத் தலைவர் கே.நல்லதம்பி கூறியது:

    மேலை நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் இந்தியாவின் மோட்டார் வாகனச் சட்டத்திலும் திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி, 12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மீது வாகனம் மோதி உயிரிழப்பு ஏற்பட்டால் 7 ஆண்டுகள் சிறை, ரூ.4 லட்சம் அபராதமும், 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மீது மோதி உயிரிழப்பு ஏற்பட்டால் 3 ஆண்டுகள் சிறை, ரூ.4 லட்சம் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் சுமைக்கு ரூ.50,000மும், சிக்கனலில் நிற்காமல் சென்றால் ரூ.15,000மும் அபராதம் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட உள்ளன.

    கடுமையான சட்டங்கள் அமலிலுள்ள வளர்ந்த நாடுகளில் சரக்கு வாகனப் போக்குவரத்துக்கு எனத் தனியாக சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் பொதுவான சாலைகளே உள்ளன. இந்த சூழ்நிலையில், மேலை நாடுகளின் அடிப்படையில் கடுமையானச் சட்டங்களை அமல்படுத்துவது இந்தியாவுக்கு பொருந்துவதாக இருக்காது. எனவே, சாலைகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு ஏற்றவகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.

    மேலும், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு, நாமக்கல் நகரைச் சுற்றி வட்டச்சாலைப் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். லாரி போக்குவரத்துத் தொழிலில் முன்னணியில் உள்ள நாமக்கல்லில் மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழில்பூங்கா அமைக்க வேண்டும். வளர்ந்து வரும் கல்வி மாவட்டமான நாமக்கல்லில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், லாரித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும், நாமக்கல் பரமத்தி சாலையிலுள்ள ஆட்டோ நகரில் தார்ச் சாலைகள், மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவில் அமைக்க

    வேண்டும். லாரிகளை நிறுத்துவதற்கு நாமக்கல் நகரில் லாரி நிறுத்தம் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். இட நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு நாமக்கல் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார் அவர்.

    சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.சேகர், துணைச் செயலர் பி.கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai