Enable Javscript for better performance
நாமக்கல்லில் வழக்குரைஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல்லில் வழக்குரைஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு

    By நாமக்கல்  |   Published on : 07th November 2014 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியை பணியிடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் காலவரையற்ற நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை வியாழக்கிழமை தொடக்கினர்.

    நாமக்கல் பார் அசோசியேஷன் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அந்த அமைப்பின் செயலர் எஸ்.அன்பரசன் கூறியது:

    நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ராமதிலகம், வழக்குரைஞர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். நீதிமன்ற வளாகத்திலுள்ள கூட்ட அரங்கை வழக்குரைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிப்பதில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளால் வழக்குரைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதையடுத்து, அவரை பணியிடமாற்றம் செய்ய வலியுறுத்தி, நாமக்கல் பார் அசோசியேஷன், சிவில் அசோசியேஷன் சார்பில், வழக்குரைஞர்கள் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் வியாழக்கிழமை புறக்கணிக்கவும், தொடர்ந்து, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை காலவரையின்றி புறக்கணிக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், நவம்பர் 7, டிசம்பர் 6-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள மெகா மக்கள் நீதிமன்றத்திலும் வழக்குரைஞர்கள் பங்கேற்பதில்லை என்றும், இந்தக் கூட்ட முடிவை மாவட்டத்திலுள்ள அனைத்து வழக்குரைஞர் சங்கங்களுக்கும் தெரியப்படுத்தி ஆதரவு கோரவும் தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது என்றார்.

    இந்தக் கூட்ட முடிவின்படி, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலுள்ள

    13 நீதிமன்றங்களையும் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை புறக்கணித்தனர். தொடர்ந்து, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை மட்டும் காலவரையின்றி புறக்கணிக்க உள்ளதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தால் நீதிமன்ற வழக்கு விசாரணை பணிகள் பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai