Enable Javscript for better performance
நாமக்கல் கால்நடை மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் கால்நடை மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு

    By நாமக்கல்,  |   Published on : 07th November 2014 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை குறைபாடுகள் உள்ளதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டியதை அடுத்து, அந்த மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் சிறப்பாக உள்ளன என்றார்.

    நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பலரும், நாமக்கல் - திருச்சி சாலையிலுள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படும் கால்நடைகளுக்கு நோயின் தன்மையை அறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும், ஸ்கேன் செய்வதற்கான வசதி போதுமான அளவில் இல்லாததால் பெரும்பாலான கால்நடைகளுக்கும் நேரடியாகவே அறுவைச் சிகிச்சை செய்யப்படுவதாகவும், இதனால், அந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் 90 சதக் கால்நடைகள் இறந்து விடுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

    விவசாயிகளின் இந்தப் புகாரை அடுத்து, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி, நாமக்கல் - திருச்சி சாலையிலுள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அறுவைச் சிகிச்சை பிரிவு, சிகிச்சையியல் பிரிவு, ஆய்வகங்கள், மருந்து இருப்புக் கூடம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்ட அவர், மருத்துவமனையில் கால்நடைகளுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள், விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் கூறியது:

    தமிழகத்திலேயே கால்நடைகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கக்கூடிய 2-ஆவது மிகப் பெரிய கால்நடை மருத்துவமனையாக நாமக்கல் மருத்துவமனை உள்ளது. இங்கு மருத்துவப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, ஈனியல், இனப் பெருக்கப் பிரிவு என பல்வேறு பிரிவுகள் உள்ளன. பெரிய, சிறிய கால்நடைகள், செல்லப் பிராணிகள், பறவைகள், வன விலங்குகள் என அனைத்து வகையான விலங்குகளுக்கும் இங்கு சிறப்பாகச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    எக்ஸ்ரே, ஸ்கேன், லேப்ராஸ்கோப்பி, குடல் உள்நோக்கு கருவி, மூச்சுக் குழாய் உள்நோக்கு கருவி ஆகிய அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள் மூலம் தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இந்த மருத்துவமனையில் கால்நடைகளுக்கு இனப்பெருக்க கருவூட்டல் முறையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 3,806 பசுக்களுக்கும், 2,077 எருமைகளுக்கும், 246 ஆடுகளுக்கும் என மொத்தம் 6,129 கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், இந்த மருத்துவமனையில் இதுவரை மாடுகள், ஆடுகள், குதிரைகள் என 557 கால்நடைகளுக்கு அறுவைச் சிகிச்சைகளும், 328 கால்நடைகளுக்கு பெரிய அளிவிலான அறுவைச் கிசிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 97 சத கால்நடைகள் தற்போது நல்ல நிலையில் உள்ளன. 3 சத கால்நடைகளின் இறப்புக்கு கால்நடை வளர்ப்போர், தங்கள் கால்நடைகளுக்கு ஏற்பட்ட நோயின் தன்மையை அறியாமல் உரிய நேரத்துக்கு சிகிச்சைக்கு அழைத்து வராததே காரணமாக இருந்தது ஆய்வில் தெரிவந்துள்ளது என்றார் அவர்.

    ஆய்வின் போது, கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கே.ஏ.துரைசாமி, கால்நடை பாரமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் பி.சக்திவேல், சிகிச்சைத் துறை தலைவர் செல்வராஜ், ஈனியல், இனப்பெருக்கத் துறை தலைவர் ஆர்.எசேக்கியல் நெப்போலியன், சிகிச்சை, நன்னெறி சட்டவியல் துறை பேராசிரியர் ம.சுப்பிரமணி, அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் ச.தர்மசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai