சுடச்சுட

    

    காவிரியை சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு பிரசாரம்

    By பரமத்திவேலூர்,  |   Published on : 10th November 2014 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமை அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பில், 4-ஆம் ஆண்டு அன்னை காவிரி தீர்த்த நதி பாதுகாப்பு ரத யாத்திரையும், காவிரியைச் சுத்தமாக வைத்திருப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரமும் நடைபெற்றது.

    அகில பாரதிய துறவியர்கள், தொண்டு நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் சேர்ந்து, பரமத்திவேலூர் காவிரி ஆற்றுக்குச் சென்று கர்நாடக மாநிலம், குசால் நகரில் இருந்து ரத யாத்திரை மூலம் கொண்டு வரப்பட்ட காவிரித் தாய்க்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்தும், காவிரித் தாய்க்கு மலர் தூவியும் வழிபட்டனர்.

    பின்னர், குப்பைகள், பழைய ஆடைகள், பாலித்தீன் பொருள்களை காவிரியாற்றில் போடக் கூடாது என, அந்தப் பகுதியில் இருந்தவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    மேலும், காவிரியை மாசுப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் கலக்கும் ரசாயனக் கழிவுகள், சாக்கடை கழிவுகள் கலப்பதைத் தடுக்க அந்தந்த பகுதியில் உள்ள அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

    வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களிலும், மழைக் காலங்களில் அதிக அளவு உபரிநீர் கடலில் கலக்கிறது. இந்த நீரைச் சேமிக்கும் வகையில் காவிரியில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர், பரமத்திவேலூரின் முக்கிய சாலை வழியாக ரத யாத்திரை சென்று, வர்த்தக நிறுவனங்கள், பேருந்து நிலையக் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு காவிரியை மாசுபடாமல் பாதுகாப்பது குறித்து துண்டுப்பிரசுரங்கள் வழங்கினர்.

    இந்த ரத யாத்திரை திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர், திருச்சி அம்மா மண்டபம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதி வரை சென்று வரும் 14-ஆம் தேதி பூம்புகாரில் நிறைவு பெறுகிறது.

    முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அன்னை காவிரி தீர்த்த நதி பாதுகாப்பு ரத யாத்திரையின் ஒருங்கிணைப்பாளர் ரத்தின சைதன்யா தலைமை தாங்கினார். நாமக்கல் ராமகிருஷ்ணா ஆசிரமத் தலைவர் பூர்ணசேவானந்தா, பரமத்திவேலூர் கிருபானந்த வாரியார் அறக்கட்டளைத் தலைவர் ராமலிங்கம் ஆகியோ முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள், அகில பாரத சேவா சங்கம், ராமலிங்க மடாலய அறக்கட்டளை, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai