சுடச்சுட

  

  வெளி மாநிலத் தொழிலாளர் விவரங்களை தெரிவிக்க நிறுவனங்களுக்கு உத்தரவு

  By நாமக்கல்  |   Published on : 12th November 2014 12:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க  அவர்களை பணியமர்த்தியுள்ள நிறுவனங்கள், தொழிற்கூட உரிமையாளர்களுக்கு ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

  வெளி மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்திட தமிழக அரசால் சென்னை தொழிற்கல்வி மற்றும் பணிமேம்பாட்டு மையத்தை முகவராக நியமிக்கப்பட்டுள்ளது.

  இந்நிறுவனம் சார்பில் தற்போது நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு தொழில் நிறுவனங்கள், கட்டுமானப் பணிகள், இதர அமைப்பு சாரா பணிகளில் ஈடுபட்டு வரும் வெளி மாநில தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பு பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.

  கூட்டத்தில் அவர் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள், நூற்பாலைகள், கோழிப் பண்ணைகள், ரிக் தொழில்கள், கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் 7000க்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருவது இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

  தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கணக்கெடுப்புப் பணிக்கு இம்மாவட்டத்தின் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், விசைத்தறி உரிமையாளர்கள், ரிக் உரிமையாளர்கள், கட்டட ஒப்பந்ததாரார்கள் என வெளிமாநிலத் தொழிலாளர்களை பணி அமர்த்தியுள்ள அனைத்துத் தரப்பினரும் முழுஒத்துழைப்பு அளித்திட வேண்டும். தவிர, தலைமை மருத்துவமனை, மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவற்றில் சிகிச்சை பெற நாளொன்றுக்கு எத்தனை வெளிமாநில தொழிலாளர்கள் வருகின்றனர் என்பதை மாவட்ட சுகாதார துறை அறிக்கை அளித்திட வேண்டும் என்றார் அவர்.

  மாவட்ட வருவாய் அலுவலர் சுப்புலட்சுமி, கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் உமாரவிக்குமார், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுமன், மாவட்ட சிறப்பு அமலாக்கத் திட்ட அலுவலர் சூர்யபிரகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai