சுடச்சுட

  

  நாமக்கல் - துறையூர் அணுகு சாலைப் பணி தாமதம்: மக்கள் அவதி

  By நாமக்கல்  |   Published on : 14th November 2014 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் - துறையூர் சாலையில் உள்ள ரயில்வே பாலத்தின் இரு புறமும் அணுகு சாலை அமைக்கும் பணி தாமதமாகி வருவதால் அந்தப் பகுதி மக்கள், தொழில் புரிவோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த அணுகு சாலை அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

  சேலம் - கரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணி 15 ஆண்டு கால இழுபறிக்கு பிறகு கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் நிறைவு செய்யப்பட்டு, இந்த வழியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டதை அடுத்து, நாமக்கல் வட்டத்தில் சேந்தமங்கலம் சாலை, துறையூர் சாலை, திருச்சி சாலை, மோகனூர் சாலை (லத்துவாடி அருகே) ஆகிய 4 இடங்களில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ரயில்வே பாலங்கள் அமைக்கப்பட்டன.

  இதில், நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான துறையூர் சாலையிலுள்ள ரயில்வே பாலத்தின் இருபுறத்திலும் இதுவரை அணுகு சாலைகள் அமைக்கப்படவில்லை. இந்தப் பாலத்தையொட்டி இருபுறத்திலும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும், லாரி தொழில் சார்ந்த பல்வேறு தொழில்சாலைகளும் அமைந்துள்ளன. இந்தத் தொழில் கூடங்களில் பழுதுநீக்கம் செய்யவும், புதிய வாகனங்களுக்கு கூண்டு கட்டடவும் ஏராளமான சரக்கு வாகனங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில், ரயில்வே பாலத்தின் இருபுறத்திலும் பல ஆண்டுகளாக அணுகு சாலைகள் அமைக்கப்படாததால் அந்தப் பகுதியிலுள்ள தொழில்கூடங்களுக்கு கொசவம்பட்டி நால் வழிச்சாலை வழியாக பல கி.மீ. தொலைவுக்கு சுற்றி லாரிகளைக் கொண்டு வர வேண்டியுள்ளது.

  கொசவம்பட்டி நால்வழிச் சாலையிலிருந்து இந்த தொழில்கூடங்களுக்கு வரும் இடைப்பட்ட தொலைவில் ஏராளமான குடியிருப்புகள், கடைகள் அமைந்திருப்பதுடன், அந்தச் சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால் பழுதான லாரிகளை தொழில்கூடங்களுக்கு கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் இருந்த சில தொழில்பட்டறைகள் காலி செய்யப்பட்டதாகவும் லாரி தொழில்கூட உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

  இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது:

  தொடரும் பாதிப்புகளை அடுத்து, துறையூர் சாலை ரயில்வே பாலத்தின் இரு புறமும் விரைவில் அணுகு சாலை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், இந்த அணுகு சாலை அமைப்பதில் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து மெத்தனமாக உள்ளது.

  பல ஆண்டுகால கோரிக்கைக்கு பிறகு அங்கு தற்போது ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன.

  இருப்பினும், இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கும் அளவுகளில் முரண்பாடு காணப்படுகிறது. இதனால், பாலத்தின் இருபுறத்தில் அமைக்கப்பட உள்ள அணுகு சாலையில் கனரக வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படக்கூடும்.

  எனவே, ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கனரக வாகனங்கள் வந்து செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தொடர்ந்து, விரைவில் அணுகு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் அவற்றை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai