சுடச்சுட

    

    கொத்தடிமைகளாகப் பணியாற்றிய 28 சத்தீஸ்கர் மாநில தொழிலாளர்கள் மீட்பு

    By நாமக்கல்,  |   Published on : 15th November 2014 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் கோழிப் பண்ணைகளில் கொத்தடிமைகளாகப் பணியமர்த்தப்பட்டிருந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 28 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அவர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1,000 முட்டை கோழிப் பண்ணைகள் உள்ளன. இந்த கோழிப் பண்ணைகளில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகப் பணியமர்த்தப்பட்டிருப்பதாக அந்த மாநிலத்துக்கு உள்பட்ட நாராயண்பூர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்த மாவட்டத்திலிருந்து வருவாய் ஆய்வாளர் பி.ஆர்.பிஷ்தா தலைமையில் தொழிலாளர் ஆய்வாளர், குழந்தைகள் நல அலுவலர், போலீஸார் என 6 பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டனர். தொடர்ந்து அந்தக் குழு நாமக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இந்தத் தகவலை தெரிவித்தனர்.

    இதையடுத்து, ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி உத்தரவின்பேரில் வருவாய்க் கோட்டாட்சியர் காளிமுத்து தலைமையில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள கோழிப் பண்ணைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில், வகுரம்பட்டியிலுள்ள ஒரு பண்ணையிலிருந்து 11 பெண் தொழிலாளர்களும், வேப்பநத்தம் புதூரிலுள்ள பண்ணையிலிருந்து 4 பெண்கள் உள்பட 5 தொழிலாளர்களும், பெருமாம்பட்டியில் உள்ள பண்ணையில் இருந்து 5 பெண்கள் உள்பட 12 தொழிலாளர்களும் என மொத்தம் 28 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் 16 பேர் 18 வயதுக்குள்பட்டவர்கள். அவர்கள் நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதில், சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இந்தத் தொழிலாளர்கள் ஓராண்டுக்கு முன் தரகர்கள் மூலம் நாமக்கல் கோழிப் பண்ணைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியமாக எவ்விதப் பணப் பயன் அளிக்கப்படாததுடன், போதுமான தங்குமிடமும், உணவும் வழங்காமல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தவிர, வெளி மாநிலங்களில் இருந்து பணியமர்த்தப்பட்டுள்ள இந்தத் தொழிலாளர்கள் குறித்து முறையாக தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்யப்படாமல் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்தத் தொழிலாளர்களைப் பாதுகாப்பாக அவர்களின் சொந்த மாநிலத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும், சத்தீஸ்கர் மாநில தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாகப் பணியமர்த்தியிருந்த மூன்று கோழிப் பண்ணை நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத் துணைத் தலைவர் சுப்பிரமணியம் கூறியது:

    தரகர்கள் மூலம் பணியாற்றும் இந்தத் தொழிலாளர்கள், ஊதியத்தை தாங்களே பெற்றுக்கொள்ளாமல் தரகர்களிடம் அளித்துவிடக் கூறுகின்றனர். இதனால், மாதந்தோறும் ஊதியத்தை அவர்களைப் பணியமர்த்திய தரகர்களிடம் அளித்து விடுவோம். தரகர்கள் தொழிலாளர்களின் பெற்றோர்களது வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தி விடுவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தொழிலாளர்கள் குறிப்பிட்ட சில மாதங்களுக்கு ஒரு முறை தரகர் மூலம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விடுவதால் அவர்களைத் தொழிலாளர் நலத் துறையில் முறையாகப் பதிவு செய்ய முடிவதில்லை.

    எனினும், அவர்களுக்குத் தரமான உணவு, தங்குமிடம் வழங்கப்பட்டு 8 மணிநேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai