சுடச்சுட

    

    ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.1.50 கோடி முதலீடு

    By குமாரபாளையம்  |   Published on : 17th November 2014 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒருங்கிணைந்த பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிலத்தைத் தேர்வு செய்து வாங்கும் பணிக்காக குமாரபாளையம் வட்டார சிறு சாயப்பட்டறை உரிமையாளர்கள் முன்னேற்ற நலச் சங்கத்தினர் ரூ.1.50 கோடியை முதல்கட்டமாக வங்கியில் முதலீடாகச் செலுத்தினர்.

    குமாரபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. சுத்திகரிப்பு நிலையம் இல்லாத நிலையில், சாயக் கழிவுகள் நேரடியாக சாக்கடையில் வெளியேற்றி வந்தன. கழிவுகள் அனைத்தும் காவிரி ஆற்றில் சென்று கலப்பதால் நீராதாரம் மாசடைவதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது.

    இதையடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் விதிமீறும் சாயப்பட்டறைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு, இடித்து அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, குற்றவியல் நடவடிக்கையும் எடுத்து வந்தனர். இந்த நிலையில், தமிழக அரசு 4 மாவட்டங்களுக்கு ஒருமுகப்படுத்தப்பட்ட தொழில்சார்ந்த வளர்ச்சிக் குழுமத் திட்டத்துடன், நவீன வசதிகளுடன் கூடிய தொழில் பூங்கா ரூ.700 கோடியில் அமைக்கப்படும் என அறிவித்தது.

    பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சாயத்தொழில் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் பகுதியை அமைச்சர் தங்கமணி, மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி, சுற்றுச்சூழல் பொறியாளர் முருகன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும், குறு, சிறு சாயம், சலவைப் பட்டறை உரிமையாளர்களுக்கு இத்திட்டத்துக்கு 50 முதல் 60 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்யுமாறும், நிலத்தின் உரிமையாளர்களிடம் பேசி சாயப்பட்டறை உரிமையாளர்களால் ஏற்படுத்தப்படும் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

    இதையடுத்து, குமாரபாளையம் சிறு கை சாயப்பட்டறை உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.1.50 கோடியை முதலீடாகச் செலுத்தினர். மேலும், சுத்திகரிப்பு நிலையத்துக்கு பலர் முதலீட்டுத் தொகையைச் செலுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்த பட்டியலை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி, சுற்றுச்சூழல் பொறியாளர் முருகன், உதவிப் பொறியாளர் செல்வகுமார் ஆகியோரிடம் சாயப்பட்டறை உரிமையாளர்கள் தரப்பில் தலைவர் ஜி.கே.பிரபாகரன், செயலர் எஸ்.நாகராஜ், பி.வேலுமணி, உதவித் தலைவர் செங்கோட கவுண்டர், அப்பண்ணன், பொருளாளர் மாதேஸ்வரன் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை வழங்கினர்.

    சங்கத் தலைவர் பிரபாகரன் கூறியது: முதல்கட்டமாக வங்கியில் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையத்துக்கு ரூ.1.50 கோடி செலுத்தப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் இணைந்து சங்கத்தின் பெயரில் நிலத்தை வாங்கிப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai