சுடச்சுட

  

  கடந்த சில நாள்களாகப் பெய்த பருவ மழை காரணமாக மோகனூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பயிரிட்டிருந்த கோரைப் பயிர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை அடுத்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

  வடகிழக்குப் பருவ மழையின் தாக்கம் தீவிரமடைந்து, நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை புஞ்சை பயிர்களான சோளம், கடலை, கம்பு, ஆமணக்கு, துவரை ஆகிய பயிர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  அதேசமயம், இந்த பருவமழை காவிரிக் கரை பகுதிகளான மோகனூர், ஒருவந்தூர், மணப்பள்ளி, பாலப்பட்டி, குன்னிப்பாளையம், பேட்டப்பாளையம் ஆகிய இடங்களைச் சேர்ந்த கோரை விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்தப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கோரைப் புல்கள் இப்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு அறுவடை செய்யப்பட்ட புல்களை இயந்திரங்கள் மூலம் இரண்டாகக் கிழித்து, வெயிலில் நன்கு காய வைத்து, பின்னர் கட்டுகளாகக் கட்டி வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்படுகின்றன.

  அவ்வாறு காயவைக்கப்பட்டிருந்த கோரைப் புல்கள் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் மழையில் நனைந்து, தற்போது அழுகிய நிலையில் காணப்படுகின்றன. அவற்றை மீண்டும் வெயிலில் காயவைத்து விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

  இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கூறியது: நன்கு விளைந்த கோரைப் புல்கள் பருவ சமயங்களில் நல்ல விலைக்கு விற்கப்படும். ஒரு ஏக்கரில் பயிரிடப்படும் கோரை, ஒரு ஆண்டுக்கு லட்சக்கணக்கில் விவசாயிகளுக்கு லாபத்தை ஈட்டித் தரும். குறைந்த செலவு, குறுகிய கால பயிர் என்பதால், அதிகளவில் விவசாயிகள் இந்தப் பயிரை சாகுபடி செய்து வருகின்றனர்.

  இந்த நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்த மழையால் அறுவடை செய்யப்பட்டு காயவைக்கப்பட்டிருந்த கோரைப் புல்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை வாங்குவதற்கு வியாபாரிகள் முன்வராததால் மிகக்குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

  தொடர்ந்து, மழை நீடித்தால் கோரைப் பயிர்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு மென்மேலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai