சுடச்சுட

    

    கோயில் திருவிழா நடத்துவதில் தகராறு:அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி

    By திருச்செங்கோடு,  |   Published on : 20th November 2014 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு அருகே கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.

    திருச்செங்கோடு அருகேயுள்ள பருத்திப்பள்ளியில் அண்ணன்மார் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக கோயில் பூசாரிகள் வகையறாவுக்கும், நிர்வாகக் குழுவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த அமைதிப் பேச்சுவார்த்தை திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு வருவாய்க் கோட்டாட்சியர் சுமன் தலைமை வகித்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமசாமி, வட்டாட்சியர் குப்புசாமி, இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் உமாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நிர்வாகக் குழுவினர் தாங்கள் மட்டுமே வரி வசூல் செய்து திருவிழாவை நடத்துவோம் என்றும், பூசாரிகள் பூஜை மட்டுமே செய்ய வேண்டும் என்றும் கூறினர். பூசாரிகள் தரப்பினர், தங்களை இந்து சமய அறநிலையத் துறை தர்மகர்த்தா என்று உத்தரவு பிறப்பித்துள்ளதால், தாங்கள்தான் பூஜையையும், நிர்வாகத்தையும் கவனிப்போம் என்று வலியுறுத்தினர். இரு தரப்பினரும் வழக்குரைஞர்களுடன் வந்திருந்தனர். அவர்கள் மற்றவர் கருத்தை ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மீண்டும் பேச்சுவார்த்தை வருகிற சனிக்கிழமை மாலை 3 மணிககு தள்ளி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த இரு தரப்பினரும் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மோதிக் கொள்ளும் சூழல் உருவானது. உடனே போலீஸார் தலையிட்டு அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். இரு தரப்பு மோதலால் கோயில் திருவிழா நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

    இந்த திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சுமார் 15 ஆயிரம் பேர் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது. பன்றி குத்தும் நிகழ்ச்சி இந்தத் திருவிழாவின் முக்கிய அம்சமாகும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai