சுடச்சுட

    

    தொழிலாளர்களுக்கு வருகை, சம்பளப் பதிவேடு கட்டாயம்

    By நாமக்கல்,  |   Published on : 20th November 2014 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொழிலாளர்களுக்கு வருகை, சம்பளப் பதிவேட்டைக் கட்டாயம் பராமரிக்க வேண்டும் என தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தினார்.

    நாமக்கல் மாவட்டக் கோழிப் பண்ணைகளில் சத்தீஸ்கர் மாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போல பணியாற்றி வருவதாக, அந்த மாநில நாராயண்பூர் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்தத் தகவலை அடுத்து, அந்த மாநில அதிகாரிகள், நாமக்கல் கோட்டாட்சியர் காளிமுத்துடன் இணைந்து 3 பண்ணைகளில் சோதனையிட்டு 43 தொழிலாளர்களை மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக, கோழிப் பண்ணை உரிமையாளர்கள் 4 பேர் மீது கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் பிரதான தொழில்களான கோழிப் பண்ணை, ரிக் லாரி, லாரி பாடி கட்டும் தொழில், விசைத்தறி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தி, ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தரப்பில் பேசிய சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியம், டாக்டர் செல்வராஜ் ஆகியோர், கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தவில்லை. வெளிமாநிலத் தொழிலாளர்களை பண்ணைகளுக்கு அழைத்து வந்த முகவர் மூலம் தொழிலாளர்களுக்கு கூலி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நடைமுறை சட்ட விரோதம் என்பதை பண்ணை உரிமையாளர்கள் அறியவில்லை. இனிவரும் காலங்களில் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்குத் தொடங்கி அதன் மூலம் ஊதியம் வழங்கப்படும்.

    மேலும், தொழிலாளர்களுக்கு எப்போதும் போல அனைத்து வசதிகளும் பண்ணை உரிமையாளர்கள் மூலம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

    இப்போது நடைபெற்றுவரும் ஆய்வு, பண்ணை உரிமையாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு போன்றவற்றால், பண்ணை உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொழிலாளர்களும் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் மாவட்டத்தில் கோழிப் பண்ணை தொழில் பெரும் பின்னடவைச் சந்தித்துள்ளது. பண்ணை உரிமையாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெற ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    இதே கருத்தை பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர்.

    இதன்பிறகு ஆட்சியர் கூறியது: தொழில் சிறப்பாக, பிரச்னையில்லாமல் நடைபெற சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு நாமக்கல் மாவட்டத் தொழில் உரிமையாளர்கள் செயல்பட வேண்டும். கோழிப் பண்ணை உள்ளிட்ட அனைத்துத் தொழில் நிறுவனங்களுமே, தொழிலாளர்களுக்கு உடனடியாக வருகை, சம்பளப் பதிவேட்டை ஏற்படுத்த வேண்டும். வங்கிக் கணக்குத் தொடங்க, அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் தொழில்கள் சிறப்பான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான் மாவட்ட நிர்வாகத்தின் எண்ணம். இதற்கு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளித்து தொழிலாளர் சட்டப்படி விதிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றார்.

    படித்தவர்கள் கோழிப் பண்ணைத் தொழிலை செய்ய முடியாது: இதையடுத்து கோழிப் பண்ணை உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் கூறியது:

    தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் 70 சத கோழிப் பண்ணைகளில் வெளிமாநிலத் தொழிலாளர்கள்தான் பணிபுரிகின்றனர். இப்போது உள்ள பண்ணையாளர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளிப் படிப்பையே முடிக்காதவர்கள். அவர்களால்தான் இந்தத் தொழிலை நடத்த முடியும்.

    கால்நடை மருத்துவம் படித்துவிட்டு, கோழிப் பண்ணை வைத்தவர்கள் சட்டப்படி தொழிலை நடத்துகிறோம் என்று கூறி, பண்ணைகளை சில ஆண்டுகளில் மூடிவிட்டுச் சென்று விடுகின்றனர்.

    விவசாயத்தை மூல ஆதரமாகக் கொண்டு நடைபெறும் இந்தத் தொழிலை, சட்ட விதிமுறைகளின்படி நடத்த வேண்டும் என்பது இயலாத காரியம். தொழிலாளர் பிரச்னை வராமல் தொழிலை நடத்த பண்ணை உரிமையாளர்கள் அனைவரும் தயாராக உள்ளோம் என்றனர்.

    12 ஆயிரம் வெளி மாநிலத் தொழிலாளர்கள்:

    இதைத்தொடர்ந்து ஆட்சியர் கூறியது: நாமக்கல் மாவட்டத்தில் பிகார், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஒடிஸா மாநிலங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் தொழிலாளர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. முழுமையான விவரம் கிடைக்க, தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    தொழிலாளர்களின் விவரங்களை தொழிலாளர் துறையிடம் அளிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் பிரச்னை கடந்த ஆண்டில்தான் தொடங்கியது. இதுவரை கொத்தடிமை தொழிலாளர்கள் என அறியப்பட்ட 139 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றார்.

    தொழிலை முடக்க வெளி மாநிலங்கள் சதி: நாமக்கல் மாவட்டத்தில் கோழிப் பண்ணை, லாரி பாடி கட்டுதல், ரிக் லாரி உள்ளிட்ட தொழில்கள் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளன. இதை முடக்க வெளி மாநிலங்களில் உள்ள சிலர், சரியான வாய்ப்பைத் தேடி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதன் தொடக்கமாகக்கூட கொத்தடிமைத் தொழிலாளர் பிரச்னை எழுந்துள்ளதை எடுத்துக் கொள்ளலாம். இதனால், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தொழிலை நடத்தத் தயாராக வேண்டும் என்று தொழிலாளர் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai