சுடச்சுட

  

  ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா மட்டும் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு ஆட்சியர் உத்தரவு

  By நாமக்கல்,  |   Published on : 22nd November 2014 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  யூரியா தட்டுப்பாடு காரணமாக, ஏக்கருக்கு 2 மூட்டை மட்டும் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

  நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  இதில் பங்கேற்ற விவசாயிகள் கூறியது: கூட்டுறவு சங்கங்களில் மூட்டைக் கணக்கில் மட்டுமே யூரியா விற்பனை செய்யப்படுகிறது. குறு விவசாயிகள் நலன் கருதி, யூரியாவை கிலோ கணக்கில் விற்பனை செய்ய வேண்டும்.

  ராசிபுரம் அருகே பட்டணம் ஏரியில் வேலிக் கருவேல மரங்கள் படந்து கிடப்பதால், நிலத்தடி நீர், மண்ணின் வளம் பாதிக்கப்பட்டுள்ளது.

  இதை வெட்டி எடுக்க வனத் துறையிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  மாவட்டத்தில் 260 குளங்கள் உள்ளன. இவற்றில் 99 சத குளங்களில் நீர் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால், குளங்களுக்கு தண்ணீர் வருவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த நீர் வரத்து வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும்.

  மரவள்ளிக் கிழங்குக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால், விவசாயிகள் ஆண்டுதோறும் கடுமையான இழப்பைச் சந்திக்கும் நிலை உள்ளது. இதனால், விலை நிர்ணயத்தை ஒழுங்கு விற்பனைக் கூடம் மூலம் மேற்கொள்ள ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கூட்டுறவு அல்லது பொதுத் துறை மூலம் ஜவ்வரிசி ஆலையை நாமக்கல் மாவட்டத்தில் தொடங்க வேண்டும்.

  தூத்துக்குடி-தருமபுரி உயரழுத்த மின்பாதை பணிகளுக்காக சேதப்படுத்திய பயிர்களுக்கு குறைவான இழப்பீடே வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுக் கொடுக்க வேண்டும்.

  திருச்செங்கோடு நகர எல்லை அருகே உள்ள விவசாய நிலங்களில் நகராட்சி சாக்கடை கழிவு நீர், சாயக்கழிவு நீர் புகுந்து விளை நிலங்களை பாழ்படுத்துகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

  இதைத்தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்து ஆட்சியர் பேசியது: பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் நெல் நடவு பகுதி அதிகமாக உள்ளதால், யூரியாவின் தேவை அதிகமாக உள்ளது.

  இங்கு, பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் யூரியாவை வாங்கிச் சென்று விடுவதால், கூட்டுறவு சங்கங்களில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க குடும்ப அட்டை, பட்டா, சிட்டா எண் விவரத்தை அளிக்கும் விவசாயிகளுக்கு மட்டும், ஏக்கருக்கு 2 மூட்டை மட்டும் யூரியா வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  பட்டணம் ஏரியில் வேலிக் கருவேல மரங்கள் வெட்ட ஏலம் விடப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இழப்பீடு வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகைப்பட ஆதாரத்துடன் வனத் துறையிடம் மனு அளிக்க வேண்டும். மரவள்ளிக் கிழங்கு விலை நிர்ணயத்தைப் பொருத்தவரை, ஆலைகள், விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் அடங்கிய முத்தரப்புக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்றார்.

  இந்தக் கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு)லோகநாத பிரகாசம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எம்.கிருஷ்ணகுமார், கூட்

  டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் வெ.லட்சுமி, தமிழ்நாடு மின்சார வாரியக் கண்காணிப்புப் பொறியாளர்

  சோ.சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai