சுடச்சுட

  

  மருத்துவர் இல்லாததால் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட விவசாயி சாவு

  By பரமத்திவேலூர்,  |   Published on : 22nd November 2014 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்திவேலூர் அருகே உள்ள நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பணியில் இல்லாததால், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட விவசாயி உயிரிழந்தார்.

  நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், நல்லூர் அருகே உள்ள கவுண்டிபாளையத்தைச் சேர்ந்த ராஜா கவுண்டர் மகன் நடேசன். இவர் வெள்ளிக்கிழமை காலை திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறினாராம். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

  காலை 7 மணிக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால், அங்கு நடேசனுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதையடுத்து, அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், நடேசன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

  இதனால் ஆத்திரமடைந்த கவுண்டிபாளையம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு, பரமத்திவேலூர்-திருச்செங்கோடு சாலையில் நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  இதுகுறித்து அறிந்து அங்குவந்த பரமத்திவேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் உதயகுமார், வட்டாட்சியர் மாதேஸ்வரி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்ட பொதுமக்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்பான அதிகாரிகள் வரவில்லை என்றால், மருத்துவமனைக்குப் பூட்டுப் போடப் போவதாகக் கூறி, மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

  பின்னர், அங்கு வந்த நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் உதவி இயக்குநர் நக்கீரன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

  இதையடுத்து, அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai