சுடச்சுட

    

    கோயில் திருவிழா நடத்துவதில் தகராறு: பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

    By திருச்செங்கோடு  |   Published on : 23rd November 2014 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு அருகே கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக மீண்டும் சனிக்கிழமை நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

    திருச்செங்கோடு அருகேயுள்ள பருத்திப்பள்ளியில் அண்ணன்மார் கோயில் உள்ளது. இதன் இணை கோயில் ராமாபுரத்தில் உள்ளது. கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக கோயில் பூசாரிகள் தரப்புக்கும், நிர்வாகக் குழுவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த சமாதானப் பேச்சுவார்த்தை திருச்செங்கோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

    இந்தப் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால், சனிக்கிழமை மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தை கோட்டாட்சியர் சுமன் தலைமையில் நடைபெற்றது. டிஎஸ்பி ராமசாமி, வட்டாட்சியர் குப்புசாமி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கிருஷ்ணன், ஆய்வாளர் உமாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நிர்வாகக் குழுவினர், சென்ற ஆண்டைப் போலவே தாங்கள் மட்டுமே வரி வசூல் செயது திருவிழாவை நடத்துவோம் என்றும், பூசாரிகள் பூஜை மட்டுமே செய்ய வேண்டும் என்றும் கூறினர். மேலும், பூசாரிகள் தங்களுக்குத் தெரியாமல் பரம்பரை தர்மகர்த்தா என்று இந்து சமய அறநிலையத் துறையில் உத்தரவைப் பெற்றுள்ளனர் என்றும் புகார் கூறினர்.

    பூசாரிகள் தரப்பில், தங்களை இந்து சமய அறநிலையத் துறை தர்மகர்த்தா என்று உத்தரவு பிறப்பித்துள்ளதால், தாங்கள்தான் பூஜையையும், நிர்வாகத்தையும் கவனிப்போம் என்று வாதிட்டனர். இரு சாரரும் வழக்குரைஞர்களுடன் வந்திருந்தனர்.

    இரு தரப்பினரும் தங்கள் நிலையிலிருந்து இறங்கி வராததால், அதிகாரிகளால் சுமுகத் தீர்வுகாண முடியவில்லை. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, மீண்டும் பேச்சுவார்த்தை வருகிற டிசம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இருதரப்பு மோதலால் கோயில்கள் இரண்டும் பூட்டியே கிடக்கின்றன. தினசரி பூஜைகள் நடைபெறாததால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். திருவிழா நடக்குமா என்பதே சந்தேகத்தில் உள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai