சுடச்சுட

  

  பொதுமக்கள் அளிக்கும் மனுக்களில் பாதிக்கும்மேல் கல்விக் கடன் சார்ந்தவை

  By நாமக்கல்,  |   Published on : 23rd November 2014 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொதுமக்கள் என்னிடம் அளிக்கும் கோரிக்கை மனுக்களில் பாதிக்கும் மேற்பட்டவை கல்விக் கடன் சார்ந்தவையாகவே உள்ளன என்று தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

  கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்விக் கடன் வழங்குவதற்கான சிறப்புப் பதிவு முகாம் நாமக்கல் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

  மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் எம்எல்ஏ சாந்தி ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கல்விக் கடன் வேண்டி பதிவு செய்த தகுதியான 68 மாணவ, மாணவியருக்கு ரூ.1.52 கோடி மதிப்பிலான கல்விக் கடனுதவியை வழங்கி அமைச்சர் பி.தங்கமணி பேசியது: பொதுமக்கள் என்னிடம் அளிக்கக்கூடிய மனுக்களில் பாதிக்கும் மேற்பட்டவை கல்விக் கடன் சார்ந்தவையாக இருக்கின்றன. இதன் அடிப்படையில், ஆட்சியரிடம் நான் கேட்டுக் கொண்டபடி இந்த முகாம் நடத்தப்பட்டுள்ளது.

  ஏழை, எளிய கிராம, நடுத்தர மாணவ, மாணவியர்கள் வசதியான சூழலில் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு இணையாக மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி பயில வேண்டுமானால் வங்கியாளர்களின் உதவி கட்டாயம் வேண்டும்.

  கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியருக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் சிறிதளவு சுணக்கம் காட்டினால்கூட அந்த மாணவ, மாணவியர் கல்வி கற்பதில் தடை ஏற்பட்டு, அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது.

  வங்கிகளில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கச் செல்லும் போது வங்கியாளர்கள் இது தங்களுடைய பகுதிகளுக்கு உள்பட்டது இல்லை என்று கூறி, விண்ணப்பிக்க வந்துள்ளவர்களை வேறு வங்கிகளுக்கு செல்லுமாறு அனுப்பி வைக்கின்றனர் என்று பொதுமக்கள் என்னிடம் தெரிவிக்கின்றனர்.

  வங்கி மேலாளர்கள் கல்விக் கடன் கேட்டு வருபவர்களை அலைக்கழிக்காமல் உரிய காலத்தில் கடனுதவி அளிக்க வேண்டும். அதுபோல, கல்விக் கடன் பெறும் மாணவ, மாணவியரும் லட்சிய நோக்கோடு கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.

  இந்தக் கல்வி கடன் வழங்கும் சிறப்புப் பதிவு முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சி.மாலதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.காந்தி முருகேசன், நகர்மன்றத் தலைவர் இரா.கரிகாலன், முன்னாள் எம்.பி. எஸ். அன்பழகன், நாமக்கல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கவிதா சந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் என்.மயில்சுந்தரம், இந்தியன் வங்கி சேலம் மண்டல துணைப் பொதுமேலாளர் பி.தங்கவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.சந்திரசேகர், ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai