சுடச்சுட

    

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தினசரி அபிஷேகத்துக்கு முன்பதிவு

    By நாமக்கல்  |   Published on : 24th November 2014 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தினசரி அபிஷேகத்துக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.

    நாமக்கல் நகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினமும் காலையில் நடை திறக்கப்பட்டு, 1008 வடமாலை சாத்தப்படும்.

    பின்னர், நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற நறுமணப் பொருள்களால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து, ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதற்கான செலவை பக்தர்கள் ஏற்று நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அபிஷேகச் செலவை ஒரே ஒரு நபர் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. இதனால், பின்னர் வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, கோயில் நிர்வாகம் சார்பில் அபிஷேக செலவை, 3 பேர் ஏற்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.

    அதன்படி, தற்போது தினசரி அபிஷேகத்துக்கு ஒரு நபருக்கு தேவஸ்தான கட்டணமாக தலா ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, பூஜைப் பொருள்கள் வாங்குவதற்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.12 ஆயிரம் வசூல் செய்யப்படுகிறது.

    ஒவ்வோர் ஆண்டுக்கும் முந்தைய ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் முன்பதிவு தொடங்கும். அதன்படி, 2015ஆம் ஆண்டுக்கான முன்பதிவு அண்மையில் தொடங்கியது. பக்தர்கள் போட்டி போட்டு அபிஷேகத்துக்கு முன்பதிவு செய்து வருகின்றனர்.

    அதேபோல, தங்கத் தேருக்கு ரூ.1,500 செலுத்தியும் முன்பதிவு செய்து வருகின்றனர். புஷ்ப அங்கி அலங்காரம், வெண்ணெய் காப்பு அலங்காரம், சந்தனக் காப்பு அலங்காரம் போன்றவற்றுக்கும் தனித்தனியாக முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    விடுமுறை நாள்களுக்கு முன்பதிவு முடிந்தது:

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தினசரி அபிஷேகம் நடைபெற்று வந்தாலும், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, பண்டிகை நாள்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால், அந்த நாள்களுக்கான அபிஷேகத்தை ஏற்று நடத்த பக்தர்கள் இடையே போட்டி இருக்கும். வழக்கம்போல, இந்த ஆண்டும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, பண்டிகை நாள்களுக்கான முன்பதிவுக்கு கடும் போட்டி இருந்தது.

    எனவே, முன்பதிவு தொடங்கிய சில நாள்களிலேயே 2015ஆம் ஆண்டுக்கான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, பண்டிகை நாள்களுக்கான முன்பதிவு முடிவடைந்து விட்டதாக, கோயில் பணியாளர்கள் தெரிவித்தனர். சாதாரண நாள்களிலும் பெரும்பாலான நாள்களுக்கு முன்பதிவு முடிவடைந்து விட்டதாக, கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai