சுடச்சுட

    

    கேரளத்தில் பறவைக் காய்ச்சல் எதிரொலி; கண்காணிப்புப் பணியில் 20 மருத்துவக் குழுக்கள்: நாமக்கல் ஆட்சியர் தகவல்

    By  நாமக்கல்,  |   Published on : 26th November 2014 10:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரளத்தில் பறவைக் காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதால், நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளைக் கண்காணிக்க கால்நடை மருத்துவர்கள் அடங்கிய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.
     பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உரிய உயிரியல் பாதுகாப்பு முறைகளை நடைமுறைப்படுத்தவும் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கோழிப் பண்ணையாளர்கள் அடங்கிய கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     இதில் ஆட்சியர் பேசியது: கால்நடை உதவி மருத்துவர்கள் அனைத்துப் பண்ணைகளையும் தினசரி கண்காணித்துப் பண்ணைகளில் கோழிகளில் திடீர் இறப்பு ஏற்படுகிறதா என்பதை அறிந்து தினமும் அறிக்கை அளிக்க வேண்டும்.
     பண்ணைகளில் ஏதேனும் நோய் அறிகுறி தென்பட்டால் ஆண்டகலூர்கேட்டில் உள்ள கோழி நோய் ஆய்வுக்கூடம் அல்லது நாமக்கல் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம்.
     பண்ணைகள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பண்ணைக்குள் இதர கோழிகள் மற்றும் வனப்பறவைகள் நுழைவதைத் தடுக்க வேண்டும்.
     பண்ணைக்குள் வெளி ஆட்கள் மற்றும் பார்வையாளர்கள் வருவதைக் கட்டுப்படுத்த வேண்டும். பண்ணையின் நுழைவு வாயிலில் கிருமிநாசினி நீர்த் தொட்டி அமைக்க வேண்டும்.
     பண்ணைக்குள் நுழையும் வாகனங்களின் சக்கரங்களின் மீது கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதிக்க வேண்டும்.
     பண்ணையின் வேலையாட்கள் வேறு பண்ணைகளுக்கோ, பறவை சரணாலயங்களுக்கோ செல்வதைத் தடுக்க வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை பண்ணை வளாகம் மற்றும் பண்ணையில் பயன்படுத்தும் உபகரணங்களை முற்றிலும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
     கோழிகள், வாத்துகள் மற்றும் வான்கோழிகள் போன்ற பல்வேறு வகை பறவையினங்களை ஒரே பண்ணையில் வைத்துப் பராமரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
     நாமக்கல் மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு முட்டைகள், இறைச்சிக் கோழிகள் மற்றும் கோழி எச்சங்களை வாகனங்களில் கொண்டு செல்லும் போதும் திரும்பும் போதும் வாகனங்கள், முட்டைத் தட்டுகள், கோழிக் கூண்டுகளின் மீது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.
     இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இந்த உயிரியல் பாதுகாப்பு முறைகளைப் பண்ணையாளர்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
     நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய கால்நடை மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
     மேலும் கால்நடை உதவி மருத்துவர்கள் அடங்கிய 20 விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
     கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ப.சக்திவேலு, துணை இயக்குநர் ரவிச்சந்திரன், உதவி இயக்குநர்கள் கு.சிவப்பிரகாசம், ராதாகிருஷ்ணன் மற்றும் நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai