சுடச்சுட

    

    நாமக்கல் மருத்துவர் இடைநீக்கம்:  அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

    By  நாமக்கல்,  |   Published on : 26th November 2014 10:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருத்துவர் பணி இடைநீக்க உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி நாமக்கல்லில் அரசு மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
     நாமக்கல் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் நடேசன் (58). கடந்த 21-ஆம் தேதி நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
     அப்போது அங்கு மருத்துவர் இல்லையெனத் தெரிகிறது. பணியில் இருந்த செவிலியர் சீதா, மருத்துவர் மேகலாவைத் தொடர்பு கொண்டு விவரம் கூறினாராம். ஆனால், அவர் வரத் தாமதமாகியுள்ளது.
     இதையடுத்து, நடேசனை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனராம். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
     மருத்துவர்களின் அலட்சியத்தைக் கண்டித்து, நடேசனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     இதுகுறித்து விசாரணை நடத்திய ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தி, மருத்துவர் மேகலாவை இடைநீக்கம் செய்தார்.
     முதன்மை மருத்துவர் மாணிக்கவாசகம், செவிலியர் சீதா ஆகியோரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
     இந்த நிலையில், இடைநீக்கம் மற்றும் பணியிட மாற்ற உத்தரவைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை பணி நேரம் முழுவதும், நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 280 மருத்துவர்கள் கருப்பு சின்னம் அணிந்து பணியில் ஈடுபட்டனர். நாமக்கல்லில் பஸ் நிலையம் அருகே மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
     இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் கண்ணப்பன் கூறுகையில், நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பணிபுரியும் மருத்துவர்கள் பணியின்போது அலட்சியமாக இருப்பதில்லை.
     எனவே மருத்துவர்கள், செவிலியரின் இடைநீக்கம் மற்றும் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, எங்களது உணர்வுகளைப் பதிவு செய்யும் விதமாக கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
     
     
     
     
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai