பண்ணைக் குட்டை தோண்டிய போது கிடைத்த தங்க, செப்புக் குவளைகள்
By ராசிபுரம், | Published on : 26th November 2014 10:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ராசிபுரம் அருகே பண்ணைக் குட்டை தோண்டும்போது பழங்கால தங்க, செப்புக் குவளைகள் கிடைத்தன.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது அரசப்பாளையம் ஊராட்சி. இப்பகுதியில் அருள்சாமிபிள்ளை என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டை தோண்டும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் இருந்தனர்.
சுமார் 3 அடி ஆழத்தில் தோண்டும்போது செம்பு வடிவிலான பாத்திரம் ஒன்று தென்பட்டது. மேலும் தோண்டியபோது, பழங்காலக் குடுவை, விளக்கு ஆகியவையும் இருந்தன.
செப்பிலான ஆன குடுவையில் தாலிக்கொடி, கூஜா, தோடு, மூக்குத்தி, வெள்ளி குண்டுமணி மற்றும் தங்க, செப்புத் தகடு உள்ளிட்ட
30-க்கும் மேற்பட்ட பொருள்களும் ஆபரணங்களும் இருந்தன.
மேற்பார்வைப் பணியில் ஈடுபட்டிருந்த சத்யா, அரசப்பாளையம் ஊராட்சித் தலைவர் பி.பொம்மனுக்கு தகவல் கொடுத்தார். அவர்
ராசிபுரம் வட்டாட்சியர் வி.இளங்கோவிற்கு தகவல் தெரிவித்தார்.
வடமொழி: கிடைத்த பொருள்கள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறப்படுகிறது. இப்பொருள்களில் சிலவற்றில் உருது போன்ற வடமொழி எழுத்து வடிவம் இருந்தது.
விளக்கு, கூஜா, தாலி, மூக்குத்தி போன்றவை இருந்ததால் கோவில் பூஜைகளுக்குப் பயன்படுத்தும் பொருள்களாகவும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட பொருள்கள் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியின் உத்தரவின் பேரில் ராசிபுரம் சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரின் ஆராய்ச்சிக்குப் பின் இப்பொருள்கள் குறித்த வரலாறு தெரியவரும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.