சுடச்சுட

    

    கேரளத்துக்கு முட்டைகளைக் கொண்டு செல்வதில் பாதிப்பில்லை

    By நாமக்கல்  |   Published on : 27th November 2014 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரளத்துக்கு முட்டைகளைக் கொண்டு செல்வதில் பாதிப்பில்லை என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாமக்கல் மண்டலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில், மொத்தம் 1000-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் செயல்படுகின்றன. இதன் மூலம் நாளொன்றுக்கு, சுமார் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகளில் சுமார் 1 கோடி அளவுக்கு கேரள மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

    தினமும் சுமார் 2 லட்சம் கிலோ அளவுக்கு கறிக்கோழியும் கேரளத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

    இந்நிலையில் கேரளத்தில் பறவைக் காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அங்கு சுமார் 2 லட்சம் வாத்துகள் அழிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட நிர்வாகம் கோழிப்பண்ணையாளர்களை அழைத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறியது: நாமக்கல் மண்டலத்தில், 4.62 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கேரள மாநிலத்தில், கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் தாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளிமாநிலங்களுக்கு கோழி மற்றும் முட்டைகள் ஏற்றிச் செல்லும் லாரிகளை, ரசாயன பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, விலங்கியல் நோய் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில், மர்மமான முறையில் கோழிகள் இறந்தால், உடனடியாக கால்நடை பராமரிப்புத் துறைக்கு தெரியப்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, கோழிப் பண்ணைகளில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து சம்மேளனத் தலைவர் முத்துசாமி, துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் ஆகியோர் கூறுகையில், கேரள அரசு வாத்து முட்டைகளை எடுத்துச் செல்ல மட்டுமே தடை விதித்துள்ளது. இதனால் கோழி முட்டைகளைக் கொண்டு செல்வதில் எந்த பாதிப்பும் இல்லை. பிளாஸ்டிக் அட்டைகளைத் தவிர்த்து, பேப்பர் அட்டைகளில் மட்டும் கோழி முட்டைகளைக் கொண்டு செல்ல வேண்டும் என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கேரள மாநிலம் சென்று வரும் வாகனங்களுக்கு, மருந்து அடிக்கப்பட்ட பிறகே பண்ணைகளுக்குள் விட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai