சுடச்சுட

    

    6 வழிச்சாலையாகிறது நாமக்கல்-திருச்சி மாநில நெடுஞ்சாலை

    By நாமக்கல்,  |   Published on : 28th November 2014 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல்-திருச்சி மாநில நெடுஞ்சாலை (எண் 25) ரூ.81.90 கோடி செலவில் 6 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இப்பணிகள் வரும் ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாநில நெடுஞ்சாலைத்துறையின் அங்கமான தமிழ்நாடு சாலை பிரிவுத் திட்டம்(டிஎன்ஆர்எஸ்பி) மூலம் மேற்கொள்ளப்படும், இப்பணிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தும் திட்டப் பணிகளைப் போன்று மிகவும் தரம் வாய்ந்ததாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இரண்டு மாவட்டத் தலைமையிடங்களை இணைக்கும் சாலைகள் அனைத்தும் பெரும்பாலும் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு விட்டன.

    நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை சேலம்-நாமக்கல், கரூர் நாமக்கல் சாலைகள் நான்கு வழிச்சாலையான தேசிய நெடுஞ்சாலை எண் 7-இன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

    திருச்சி மற்றும் ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் சாலைகள், சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

    இதனைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து மிகவும் அதிகமாக, மோசமான நிலையில் உள்ள சாலையான திருச்சி-நாமக்கல் சாலையை மேம்படுத்தக் கடந்த 2012-ஆம் ஆண்டில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

    இதன்படி திருச்சி-சென்னை நான்கு வழிச்சாலையில் நெம்பர் 1 டோல்கேட் தொடங்கி, நாமக்கல் மாவட்டம் நல்லூர்(மாநில நெடுஞ்சாலை எண் 25) வரை 77

    கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

    நல்லூரில் தொடங்கி, நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலை எண் 7-இல் இணையும் வகையில் வள்ளிபுரம் வரை 12 கி.மீ தூரம் சுற்று வட்டச்சாலை அமைக்கப்பட உள்ளது.

    சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான மணல் லாரிகள் திருச்சி-நாமக்கல் சாலை வழியாகவே சென்று வருகின்றன.

    இதுபோல், திருச்சி, தஞ்சை மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளுக்கான பொருள்களை ஏற்றிவரும் வாகனங்களும் இந்தச் சாலை வழியையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

    வாகனங்களில் பயணிக்க முடியாத அளவுக்கு இந்தச் சாலை மோசமான நிலையில் உள்ளது. இந்தச் சாலை மேம்பாட்டின் தேவையை அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தியதன் பேரில், 6 வழிச்சாலையாக அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இப்போது சாலை அமைக்கத் தேவைப்படும் நிலத்தின் எல்லை குறித்த அளவீடு நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடன், வரும் 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியாகும். இதன்பிறகு சாலைப் பணிகள் தொடங்கும் என திருச்சி கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    77 கிலோமீட்டர் தொலைவு உள்ள இச்சாலையில் சுமார் 22 கிலோ மீட்டர் அளவு(சுற்று வட்டச் சாலையுடன் சேர்த்து) நாமக்கல் மாவட்டத்தில் வருகிறது.

    இந்தப் பணிகளை தமிழ்நாடு சாலைப் பிரிவுத் திட்ட சேலம் கோட்ட அதிகாரிகள் மேற்கொள்வார்கள்.

    எஞ்சிய சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் திருச்சி மாவட்டத்தில் வருவதால் திருச்சி கோட்ட அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என இத்திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் 3 நான்கு வழிச்சாலைகள்: தமிழ்நாடு சாலைப் பிரிவுத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 1700 கிலோ மீட்டர் தூரத்துக்கு 28 சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளது. ரூ.8500 கோடி திட்ட மதிப்பீட்டில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல்-திருச்சி சாலை 6 வழிச் சாலையாக மாற்றும் திட்டம் தவிர்த்து, ஒமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி (மாநில நெடுஞ்சாலை எண் 86) வரை 80 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.81 கோடி திட்ட மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது.

    இதில் முதல் 45 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலையும், 45 முதல் 80 கிலோ மீட்டர் வரை சாலையை அகலப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதுபோல் மல்லியக்கரை-ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு (மாநில நெடுஞ்சாலை எண் 79) வரை ரூ.96.06 கோடி மதிப்பீட்டில், 94 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியையும் தமிழ்நாடு சாலைப் பிரிவுத் திட்டம் மேற்கொள்ள உள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai