Enable Javscript for better performance
அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் பிரசவங்கள்- Dinamani

சுடச்சுட

    

    அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் பிரசவங்கள்

    By நாமக்கல்  |   Published on : 29th November 2014 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரமாண்டமான கட்டடங்கள், கண்ணைக் கவரும் விளம்பரங்கள், நொடிக்கு ஒரு முறை உள்ளூர் தொலைக்காட்சியில் ஓடும் ஸ்குரோலிங் இப்படி எதுவும் இல்லை. ஆனாலும் கூட்டம் கூட்டமாக கர்ப்பிணிகள் படையெடுக்கிறார்கள் நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு.

    ஒரு மாவட்டத்தின், சுகாதாரத்தின் அளவுகோலே குழந்தைகள் பிறப்பு விகிதத்தில்தான் இருக்கிறது. சிசு மரணமும், கர்ப்பிணி சாவும் நிறைந்த பகுதிகள், சுகாதாரச் சீர்கேட்டின் உச்சமாக மதிப்பீடு செய்யப்படுகின்றன.

    குழந்தைப் பேறுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் பலரும் தனியார் மருத்துவமனைகளுக்குப் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அரசு மருத்துவமனைக்கு செல்ல சற்று தயக்கம் காட்டுகின்றனர்.

    ஆனால், இந்த நிலையை மாற்றியமைத்து அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்து நாமக்கல் மாவட்டத்தில் அசத்திக் கொண்டிருக்கின்றன அரசு மருத்துவமனைகள்.

    நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, இவ்விஷயத்தில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் சுமார் 800 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன.

    24 மணி நேர சேவை: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி கூறுகையில், நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், தனியார் மருத்துவமனைகளோடு போட்டி போடும் அளவுக்கு 24 மணி நேர சேவை வழங்கப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு உயர் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் இந்த மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் செல்வதற்கு 108 ஆம்புலன்ஸ் வசதி தயார் நிலையில் உள்ளது.

    அரசு மருத்துவமனைகளில் ரத்தம் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

    தாய், சேய் நலப்பிரிவு: மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் வாசுகி கூறுகையில், தமிழ்நாடு அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளின் சிகிச்சையில் கவனம் செலுத்தும் வகையில் ஒருங்கிணைந்த தாய், சேய் நலப்பிரிவு நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.

    இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள், குழந்தைகள் நிபுணர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள் என்றார்.

    பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு: எடை குறைவான, மூச்சுத் திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது.

    இதன்மூலம், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ எண்ணிக்கை இந்த ஆண்டில் அதிகரித்துள்ளது.

    கடந்த 2011-ஆம் ஆண்டில் 27 ஆயிரமாக இருந்த பிரசவ எண்ணிக்கை 2013-ஆம் ஆண்டில் 57 ஆயிரமாக அதிகரித்துள்ளது என்கின்றனர் அரசு மருத்துவமனை தாய், சேய் நல மருத்துவர்கள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai