Enable Javscript for better performance
முட்டை விலையைக் குறைத்த பண்ணையாளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக கேரளத்தில் நுகர்வு கடந்த 4 நாள்களாக குறைந்துள்ளது. இதனால், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு முட்டையை கோழிப்பண்ணையாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

    கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவியதால், அங்கு சுமார் 2 லட்சம் வாத்துகளை அந்த மாநில அரசு அழித்துள்ளது. பறவைக் காய்ச்சல் காரணமாக நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

    பறவைக் காய்ச்சல் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மேலும், கால்நடைத் துறை அதிகாரிகள் கோழிப் பண்ணைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்திலிருந்து, தினமும் சுமார் 80 லட்சம் முட்டைகளும் 2 லட்சம் கறிக்கோழிகளும் கேரளத்துக்கு அனுப்பப்படுகின்றன. இந்த நிலையில், பறவைக் காய்ச்சல் காரணமாக கேரள மாநிலம் ஆலப்புழை, கோட்டயம், கொச்சி மற்றும் பந்தனம்திட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு கறிக்கோழி, முட்டைகளை அனுப்ப அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது.

    பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், கேரள மாநிலத்தின் பிற பகுதி வியாபாரிகள் கறிக்கோழி, முட்டைகளை வாங்கத் தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையில், முட்டை தேக்கமடையாமல் தடுக்கும் வகையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் விலை குறைப்புச் செய்து இங்குள்ள பண்ணையாளர்கள் கேரளத்துக்கு முட்டையை அனுப்பி வருகின்றனர்.

    வெள்ளிக்கிழமை நிலவரப்படி நாமக்கல்லில் முட்டை விலை ரூ.3.76 என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயம் செய்திருந்தது.

    கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பீதி தணியாத நிலையில், கோழிப் பண்ணையாளர்கள் ரூ.3 முதல் ரூ.3.30 வீதம் முட்டையை கேரளத்துக்கு அனுப்பி வருகின்றனர்.

    இதுகுறித்து நாமக்கல்லை சேர்ந்த கோழிப் பண்ணையாளர்களிடம் கேட்டபோது, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயம் செய்து அறிவிக்கும் விலையை விட குறைவாக முட்டையை விற்பனை செய்யக் கூடாது என்ற நடைமுறை இருக்கிறது.

    ஆனால், நாமக்கல் கோழிப்பண்ணையாளர்களின் முக்கிய வியாபார மையமான கேரளத்தில், பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வியாபாரிகள் முட்டையைக் குறைந்த விலைக்குக் கேட்கின்றனர். முட்டை தேங்கி விடக்கூடாது என்பதால், வேறு வழி இல்லாமல் முட்டையை 50 முதல் 75 காசுகள் வரை விலைக் குறைப்பு செய்து விற்பனை செய்வதாகக் கூறினர்.

    மேலும், சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணியும் காலம் என்பதால், முட்டை நுகர்வு சற்றுக் குறைந்துள்ளது, நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணைகளில் இருந்து தினமும் 3 கோடி முட்டைகள் கிடைக்கின்றன. இப்போது உள்ள சூழலில் தினமும் சுமார் ஒரு கோடி முட்டைகளை விலைக் குறைப்பு செய்து விற்க வேண்டிய நிலை உள்ளது.

    பறவைக் காய்ச்சலை முற்றிலும் கட்டுப்படுத்தி விட்டதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால், இப்போதைக்கு முட்டை, கறிக்கோழி விற்பனை பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், விலைக் குறைப்பு தவிர்க்க முடியாதது என்றும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai