சுடச்சுட

    

    குமாரபாளையத்தில் ரூ.4.56 கோடியில் உரக் கிடங்கு அமைக்கத் திட்டம்

    By குமாரபாளையம்  |   Published on : 30th November 2014 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து உரமாக்கும் வகையில், ரூ.4.56 கோடியில் நவீன உரக் கிடங்கு அமைக்கும் பணிக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு கோரி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    குமாரபாளையம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையர் என்.சங்கரன், துணைத் தலைவர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள், போதிய குடிநீர் வழங்க வேண்டும், சாலை வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வலியுறுத்திப் பேசினர்.

    நகராட்சிப் பகுதியில் 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 33 வார்டுகளைச் சேர்த்து, 71 ஆயிரத்து 565 பேர் வசித்து வருகின்றனர். மேலும், நகரில் உள்ள குடியிருப்புகள், தொழில் கூடங்கள், உணவகங்கள், தங்கும் விடுதி, மண்டபங்களிலிருந்து நாளொன்றுக்கு 28 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

    தினசரி உற்பத்தியாகும் குப்பைகள் துப்புரவுப் பணியாளர்கள் மூலமும், நகரின் முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் 34 டம்பர் பிளேசர் மூலம் சேகரிக்கப்படுகின்றன. இந்தக் குப்பைகள் வாரச் சந்தை பகுதியில் இயங்கும் தரம் பிரிக்கும் கூடத்தில் மறுசுழற்சிக்குப் பயன்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

    மேலும், மக்கும் குப்பைகள் தனியார் நில உரிமையாளர்களின் அனுமதியுடன் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த நகராட்சியில் உரக் கிடங்கு இல்லாததால் குப்பைகளை உரமாக்க முடிவதில்லை. மழைக் காலங்களில் குப்பைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    எனவே, நிலையான உரக் கிடங்கு அமைக்க இடவசதி ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இந்த நிலையில், தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டத்தில் சாணார்பாளையம் பகுதியில் உள்ள 1.42 ஏக்கரில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம், சொத்துக்களை உள்ளது உள்ளபடியே நகராட்சி நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

    இங்கு, நவீன முறையில் அமைக்கப்படும் புதை சாக்கடைத் திட்டத்தின் சுத்திகரிப்பு நிலையத்துக்கு 4 ஏக்கர் நிலம் போதுமானது. மீதமுள்ள 6.42 ஏக்கர் பரப்பளவில் புதிய உரக் கிடங்கு அமைக்கவும், குப்பைகளிலிருந்து உரம் தயார் செய்யும் பணியை மேற்கொள்ளவும் முடியும்.

    எனவே, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தும் குப்பைகளைத் தரம் பிரிக்கவும், இந்தப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், இயந்திரங்கள், தளவாடங்கள் வாங்குவது அவசிமாகிறது. இந்தத் திட்டத்தை நகராட்சிப் பகுதியில் நிறைவேற்ற ரூ.4.56 கோடி செலவாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை வழங்க வேண்டுவது உள்பட 27 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai