சுடச்சுட

  

  நாமக்கல்லில் பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை தொடர்பான அரசின் நடவடிக்கைகளுக்கு, சிறிய பண்ணைகளில் ஒத்துழைப்பு இல்லை என, கால்நடை மருத்துவர்கள் புகார் தெரிவித்தனர்.

  பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

  தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி, நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் சக்திவேல், சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜெமினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இதில், மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பேசியது: மாவட்ட நிர்வாகம் வழக்கத்துக்கு மாறாக தூய்மைப் பணிகளில் முனைப்புடன் செயல்பட வேண்டும். வனப் பகுதியில் பறவைகள் மொத்தமாக திடீரென இறந்தால், மாவட்ட நிர்வாகத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

  கேரளத்தில் இருந்து கொண்டு வரப்படும் வாத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ணையாளர்கள் கிருமி நாசினி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை 100 சதம் நிறைவேற்ற வேண்டும்.

  இறந்த கோழிகளை மூட்டை கட்டி, சாலைகளில் வீசிச் செல்வதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதைப் பண்ணையாளர்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறு இறந்த கோழிகள் சாலையோரம் கிடந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

  இனிவரும் காலங்களில் இறந்த கோழிகளை சாலையோரம் வீசும் பண்ணையாளர்கள் மீதும், அதை அப்புறப்படுத்தத் தவறிய உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கையெடுக்கப்படும் என்றார்.

  அமைச்சர் பி.தங்கமணி பேசியது: நாமக்கல் மாவட்டத்தில் 90 சத பண்ணைகளில் முறையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10 சத பண்ணையாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால், பாதுகாப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாதுகாப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும். தொழில் போட்டியைக் கருத்தில் கொள்ளாமல், உங்கள் முதலீட்டைப் பாதுகாத்துக் கொள்ள அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு பண்ணையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து, பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

  சிறிய பண்ணைகளில் ஒத்துழைப்பு இல்லை: கோழிப் பண்ணைகளை ஆய்வு செய்ய கால்நடை மருத்துவர்கள் அடங்கிய 42 விரைவுப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவர்களிடம், ஆய்வு விவரம் குறித்து தெரிவிக்க அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

  அப்போது பேசிய மருத்துவர்கள், பெரிய பண்ணைகளில் அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறிய பண்ணைகளில் எந்தப் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை. மருத்துவர்கள் வலியுறுத்தினாலும், பண்ணையாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai