Enable Javscript for better performance
கலப்படத்தை தடுக்க ஜவ்வரிசி ஆலைகளில் தொடர் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    கலப்படத்தை தடுக்க ஜவ்வரிசி ஆலைகளில் தொடர் சோதனை

    By நாமக்கல்  |   Published on : 01st January 2015 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கலப்படத்தை தடுக்கும் வகையில், ஜவ்வரிசி ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜவ்வரிசி தயாரிப்பில் கலப்படம் செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள உணவுப் பாதுகாப்பு அலுவலருக்கு, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார்.

    இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறை மாவட்ட நியமன அலுவலர் கு.தமிழ்ச்செல்வன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சண்முகம், நரசிம்மன், ராமசுப்ரமணியன், ராமச்சந்திரன் ஆகியோர் பேளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டையில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறை, மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியது:

    இந்த ஆய்வில் 4 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டன. அங்கு 4 ஆலைகள் இயங்கவில்லை. மீதமுள்ள ஆலைகள் தற்போதுதான் இயங்க ஆரம்பித்துள்ளன.

    ஆய்வின்போது, தோலை முழுமையாக உரித்து ஜவ்வரிசி தயாரிக்கிறார்களா, மக்காச்சோளம், ரசாயனப் பொருள்கள் ஏதும் உள்ளனவா என்று தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது. மரவள்ளிக் கிழங்கின் தோலை முழுமையாக உரித்து ஜவ்வரிசி தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின் போது, மக்காச்சோளமாவு, ரசாயனப் பொருள்கள் ஏதும் கண்டறியப்படவில்லை.

    தொட்டிகளை மாவைக் கரைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் ஒரே ஒரு மோட்டார் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆலைகளிலுள்ள தொட்டிகளின் நான்கு பகுதியையும் ஒரே அளவாக சமப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    ஆய்வின் போது, எடுக்கப்பட்ட உணவு மாதிரிகள் உணவுப்பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், உணவு மாதிரிகளில் தவறுகள் இருப்பது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் மீது உணவுப் பாதுகாப்பு தரச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஜவ்வரிசி ஆலைகளில் கலப்படத்தைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே, இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதாகவும், இந்தச் சோதனை தொடரும் என உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai