சுடச்சுட

    

    கிராம சுகாதார செவிலியர் மீது திராவகம் வீசிய இருவர் கைது

    By நாமக்கல்,  |   Published on : 01st January 2015 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிராம சுகாதார செவிலியர் மீது திராவகம் வீசியது தொடர்பாக கட்டட தொழிலாளிகள் இருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி விஜயகுமாரி (46), இலுப்புலி துணை சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.

    செவ்வாய்க்கிழமை மாலை பணிமுடிந்து, மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடியிருப்புக்கு, அப்பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    மாணிக்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விஜயகுமாரி மீது திராவகம் வீசி விட்டுத் தப்பிவிட்டனர். இதில் படுகாயமடைந்த விஜயகுமாரி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    குழந்தை இறப்புக்கு பழி தீர்க்க: இதுதொடர்பாக வேலகவுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    சந்தேகத்தின்பேரில் எலச்சிபாளையம் அருகே கொண்ணையார் கிராமத்தைத் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பிரபு என்ற மணிகண்டன்(25), நண்பர் விக்கி என்ற விஜயகுமார்(20), இருவரையும் தனிப்படை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

    விசாரணையில் மணிகண்டன், தன் மனைவி மீனாவை பிரசவத்துக்காக எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சேர்த்துள்ளார். அப்போது விஜயகுமாரி அங்கு பணியாற்றி வந்துள்ளார்.

    அங்கு மீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது, அந்த குழந்தை சற்று நேரத்தில் இறந்து விட்டது. அப்போது பணியில் இருந்த விஜயகுமாரி, சரியாகக் கவனிக்காததால்தான் குழந்தை இறந்துவிட்டதாகக் கருதிய மணிகண்டன், விஜயகுமாரியிடம் பிரச்னை செய்ததாகக் கூறப்படுகிறது.

    இதன்பிறகு விஜயகுமாரியைப் பழிவாங்க எண்ணிய மணிகண்டன், தன் நண்பர் விஜயகுமாரோடு சேர்ந்து, மாணிக்கம்பாளையத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து சென்ற விஜயகுமாரி மீது திராவகம் வீசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai